2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’இயந்திரம் மூலம் வேளாண்மை செய்தால் அதிக இலாபம் பெறலாம்’

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரசாயனப் பசளைகளுடன் சோதனைப் பசளைகளையும், வேளாண்மைச் செய்கைக்கு இடுவதன் மூலம் உச்ச விளைச்சலைப் பெறலாம் என்ற விடயத்தை வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும், வெல்லாவெளிப் பிரதேச விவசாயிகள் நிரூபித்துள்ளார்கள். இவர்கள் வேளாண்மைச் செய்கையில், நவீன தொழில் நுட்பமும் அதற்குரிய பசளைப் பிரயோகத்தையும் பயன்படுத்துகின்றமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும் என, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் இன்று (22) தெரிவித்தார்.

 

மட்டக்களப்பு, செல்வபுரக் கிராமத்தில் 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நெல் நாற்றும்  நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேளாண்மைச் செய்கையினை விருத்தி செய்வதற்காகத் தான்,முன்னணி விவசாயிகளை தெரிவு செய்து புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றோம்.

இம்முறை 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நடுகை செய்தால், அடுத்து வரும் சிறுபோகத்தில் அது 10 வீதத்திற்கு அதிகரிக்கப்படல் வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகளின் வளர்ச்சியும், வருமானமும் மென்மேலும் அதிகரிக்கும்.

இயந்திரம் மூலம் நடப்பட்ட வயலில் அறுவடை விழா வைக்கும்போது சாதாரண விதைப்புக்கும், இயந்திரம் மூலம் நாற்று நட்டுவதற்கும் இடையில் ஏற்பட்ட விளைச்சலின் அதிகரிப்பு வீதம் தெரியவரும். சாதாரணமான முறையில் ஒரு ஏக்கரில் வேளாண்மை செய்தால்    28,100 ரூபாய் வருமானம் கிடைக்கும், இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் நாற்று நட்டு வேளாண்மை செய்தால் ஒரு ஏக்கரில்  83,300 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

எனவே எதிர்வரும் சிறுபோகத்தில் இயந்திரம் மூலம் நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட முன்வரும் அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஏக்கருக்கு அரைவாசி மானிய அடிப்படையில் விதைநெல் வழங்கப்படும். இது சாதாரண முறையில் நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

இயந்திரம் மூலம் நெல்நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் நஞ்சற்ற நாட்டைக் கட்டியெழுப்பலாம். இதில் பயிரின் செறிவு, நோய்த்தாக்கங்கள் இன்மை, களைகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பலவற்றிற்குரிய செலவுகளும் மிகக்குறைவாகத்தான் தேவைப்படுகின்றன.

இதனால் விவசாயிகள் யாராயிருப்பினும் தங்களுக்குத் தேவையான தொழில் நுட்ப உதவிகள் தேவைப்படின் எமது விவசாய விரிவாக்கல் உத்தியோகஸ்தரை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X