2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சவுக்கடி இரட்டைப் படுகொலை: பரிசோதனையின் பின் சடலங்கள் நல்லடக்கம்

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் தீபாவளித் தினத்தன்று (18) படுகொலை செய்யப்பட்ட இளவயதுத் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் ஆகியோரின் சடலங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சவுக்கடி பொது மயானத்தில் நேற்று (21) நல்லடக்கம் செய்யப்பட்டன.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனை அறிக்கைக்காக, சடலம் கடந்த 18ஆம் திகதியன்றே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (20​), சட்ட வைத்திய அதிகாரி இனோக்கா எல். ரத்னாயக்க உடற் கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டதன் பின்ன,ர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சவுக்கடி, முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

வழமைபோன்று நித்திரைக்குச் சென்றவர்கள் புதன்கிழமை காலை 9 மணியாகியும் தாய், மகன் ஆகியோரின் ஆளரவம்  ஏதும் இல்லாதிருந்ததை அறிந்த உறவினர்கள், சந்தேகத்தின் பேரில் வீட்டுக்குள்  பார்த்தபோது வீட்டுக்கு கதவு திறந்த நிலையில் இருந்த அதேவேளை, தாயும் மகனும் இரத்தவாறாக கட்டிலில் இறந்து கிடந்துள்ளனர்.

பின்னால் வந்து வீட்டுக் கூரையை பிரித்து உள்ளிறங்கிய நபர்களே இந்தப் படுகொலையைப் புரிந்துள்ளனர்.

உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த துப்பறியும் பொலிஸாரும் மோப்ப நாய்ப் பிரிவினரும் விசாரணைகளை முடுக்கி விட்டதோடு சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன், கடந்த 7 வருடங்களாக குவைத் நாட்டில் தொடர்ச்சியாக தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பியவுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு உட்பட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு பல கோணங்களில் பொலிஸார் தமது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 25க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 16 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மோப்ப நாயின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது கைப்பிடி உடைந்த நிலையில் கொலைக்குப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கோடரியையும் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றியிருந்தனர்.

இதனிடையே, இந்தப் படுகொலையைக் வன்மையாகக் கண்டித்து ஏறாவூரில் கடந்த வெள்ளிக்கிழமை பேரணிகள் இடம்பெற்றிருந்தன.

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனப் பேரணியை நடத்தியது.

ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகை முடிந்ததும் இந்தப் பேரணி இடம்பெற்றது.

பள்ளிவாலில் இருந்து ஆரம்பமான பேரணி, கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஏறாவூர் பிரதான வீதியை வந்தடைந்தது.

ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல். அப்துல் வாஜித், செயலாளர் எஸ்.ஏ. செய்யது அஹமட் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் ஜும்மாத் தொழுகையை முடித்துக் கொண்ட பொதுமக்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இக்கொடூர கொலையைப் புரிந்த பாதகர்களை சட்டம் கண்டு பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென, சம்மேளத் தலைவர் அங்கு வலியுறுத்தினார்.

“இளம் தாயும் மகனும் படுக்கையறையில் வைத்து உறக்கத்தில் இருந்த வேளையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயலாகும்.

“இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் சமூகப் பாதுகாப்பை கட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு சமுதாயத்தின் மீதும் கடமையாகும்.

“படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சம்மேளனம்  தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது” என்றார்.

இதேவேளை, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு கோரி, குடியிருப்பு கலைமகள் வித்தியாலய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட மதுஷன் இந்தப் பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவனாவான்.

பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியூடாக சென்று, வாசிகசாலை முன்றலில் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X