2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’பௌத்த மத்திய நிலையத்தை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜூலை 17 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புணாணை பகுதியில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்துக்குட்பட்ட புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில், பௌத்த மதவிவகார அமைச்சின் அனுசரணையுடன், பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு அனுமதி மறுக்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமாருக்கு இன்று (17) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவை சேர்ந்ததாக, 1985ஆம் ஆண்டுக்கு முன், கிட்டத்தட்ட ஐந்து பெரும்பான்மையினக் குடும்பங்கள், புணாணை ரயில் நிலையத்தை அண்மித்து வாழ்ந்துள்ளனர்.

"இவர்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து கடவத்தமடு என்னும் பகுதிக்குச் சென்று அங்கு அரசாங்கத்தின் மானிய வீடு, மானிய உணவுப் பொருள் உதவியைப் பெற்று வாழ்ந்துவிட்டு, தற்போது திம்புலாகலை பிக்குவின் ஆதரவுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும், புணாணை ரயில் நிலையத்துக்கு முன் விநாயகர் ஆலயத்தை அண்மித்து ஒரு விகாரை அமைத்துவிட்டு, மீள்குடியேற்றம் என்ற காரணத்தில் 25 பெரும்பான்மையினக் குடும்பங்களுக்கு மேல் குடியேறியுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குடியேற்றத்தை, இத்திட்டமிட்ட குடியேற்றம் என வர்ணித்த அவர், வனப் பரிபாலனத் திணைக்களத்தின் ஆதரவுடனும், வாகரை பிரதேச செயலகத்தின் உதவி மூலமும், மாகாண காணிப் பணிப்பாளரின் திட்டமிட்ட குடியேற்ற மனப்பாங்குடனும் இது நடைபெற்றுள்ளது எனவும், இது கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே மீள்குடியேற்றம் என்ற ரீதியில் அவர்கள் அங்கு குடியேறியுள்ள நிலையில், உயர்கல்வி அமைச்சு, பௌத்த மதவிவகார அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன், பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க முயல்கின்றனர் எனவும், இவ்விடயத்தை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இது, "திட்டமிட்டதொரு சிங்கள மயமாக்கல் முயற்சியாகும்" என அவர் இதை விமர்சித்துள்ளார்.

"ஆகவே, இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒன்றுகூடலின் நிகழ்ச்சிநிரலில், இதையும் ஆராயுமாறு வேண்டுகிறேன்" எனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X