2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

களுத்துறை மாவட்டத்திற்கு 109 தமிழ் ஆசிரியர் நியமனம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


"களுத்துறை மாவட்டத்திலுள்ள ஏழை எளிய தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளுக்கு 109 ஆசிரியர் நியமனங்களை வழங்கியிருக்கின்றோம்  என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"கடந்த வருட இறுதியில் மேல்மாகாணத்திற்கு 453 ஆசிரியர் நியமனங்களை வழங்கியிருந்தோம். இன்று 109 ஆசிரியர் நியமனங்களை வழங்கியிருக்கின்றோம். இதில் பெரும்பாலான ஆசிரியர் நியமனங்கள் களுத்துறை மாவட்டத்திற்கே வழங்கப்பட்டுள்ளன. எமது மலையக இந்திய வம்சாவளி மக்களின் கல்வி நிலை பாரியளவில் களுத்துறை மாவட்டத்தில் பின்தங்கியுள்ளது. இதனை கண்கூடாக பார்த்தே இந்நியமனங்களுக்கு நான் முன்னின்று உழைத்திருக்கின்றேன். இதனை களுத்துறை கொழும்பு வாழ் இந்திய வம்சாவளி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எந்தவொரு பரீட்சையுமில்லாமல் வெறும் பட்டதாரிகள் என்ற அடிப்படையில் மட்டுமே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருட காலமாக மேல்மாகாணத்தில் தமிழ் மொழி மூல ஆசிரியர் நியமனம் இடம்பெறவில்லை. இருப்பினும் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் காலத்தில்தான் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது சுமார் 550 க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதில் எனது பங்களிப்பும் பாரியளவில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் அறிக்கை அரசியல் நடத்துபவர்களின் மாகாணசபை உறுப்பினர்களின் பங்களிப்பு இதில் எங்கிருக்கின்றது என்பதை நான் கேட்கின்றேன். இன்றைய இந்த நிகழ்விற்கு கூட இந்த வெற்று மாகாணசபை உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. கொழும்பு மாவட்டம் உட்பட மேல்மாகாண தமிழ் மக்கள் மத்தியில் அறிக்கைகள் மூலம் இவர்கள் தமிழ் தேசியம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மாகாணசபை மூலமாக மக்கள் சேவைகளை செய்வதில்லை.

இப்படியொரு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருப்பது கூட இவர்களுக்கு தெரியாது. இருப்பினும் தமிழ் தேசியம் என்பது  வடகிழக்கிற்கு தேவைப்பட்டிருப்பதை நான் உணர்ந்து கொள்கின்றேன். அதே தமிழ் தேசியத்தை இங்கு கொண்டு வந்து வர்த்தகர்களிடமும் இனங்களிடமும் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்கள் மாகாணசபை அங்கத்துவத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாக இதுவரை சாதித்தது என்னவென்று கேட்கின்றேன்?

மீண்டும் டிசம்பர் மாதத்தில் 300க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம். அதுமட்டுமின்றி மேல்மாகாணத்தில் தமிழ் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து வெளிமாகாணங்களிலுள்ள தமிழ் பட்டதாரிகளுக்கு மேல்மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை மேல்மாகாண முதலமைச்சர் பகிரங்கமாக நியமனம் வழங்கும் போது அறிவித்துள்ளார். இது எனது வெற்றியாகத்தான் பார்க்கின்றேன்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் தமிழ்  அரசியல்வாதிகள் மத்தியில் எமது மக்களுக்காக செயல்பட வேண்டிய ஒரு மக்கள் பிரதிநிதியாகவே என்னை நினைக்கின்றேன். இன்றைய இந்த ஆசிரியர் நியமனங்கள் மூலமாக எமது தமிழ் சமூகத்திற்கு கிடைக்கவிருக்கும் கல்வி வளர்ச்சியும் அதேபோல் இந்த பட்டதாரிகளுக்கு கிடைத்திருக்கும் அரச உத்தியோகமும் எனக்கு மன நிறைவை கொடுக்கின்றது.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதனால் எவர் என்னை விமர்சித்தாலும் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான யதார்த்தமான செயல்பாடுகளிலிருந்து நான் விலகிக்கொள்ளப் போவதுமில்லை. எனது நாடாளுமன்ற பதவி காலத்தில் முழுமையான முறையில் எனது மக்களுக்கான சேவையை நான் முன்னெடுப்பேன்" என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .