2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

31 குடும்பங்களுக்கும் மாற்றிடங்களில் வீடுகள்

Sudharshini   / 2016 ஜனவரி 27 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

நுவரெலியா, ஹங்குரங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹோப் தோட்டத்தில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக தெரிவித்து,  அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 31 குடும்பங்களுக்கு, பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.

இப்பகுதிக்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்ததுடன் அவர்களிடம் கருத்து பகிர்ந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த திலகராஜ், 'ஹங்குரங்கெத்த பிரதேசம், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்டது. எனினும், இப்பகுதியிலுள்ள முல்லோயா தோட்டம் மாத்திரமே பிராந்திய கம்பனியொன்றினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய தோட்டங்கள் அனைத்தும் ஜனவசம மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்படும் இந்த தோட்டங்களில் வாழும் மக்கள், பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். முதன் முதலாக வர்த்தக ரீதியாக தேயிலை பயிரப்பட்ட பிரசேமாக இது காணப்பட்டாலும் தற்;போதைய நிலை மிக மோசமாகவுள்ளது' என்றார்.

'இந்த மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளமையை காண முடிகின்றது. தோட்டங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமையினால், அவை காடுகளாகி வருகின்றன. இதனால் இம்மக்கள், தொழில் வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். தோட்ட சுகாதார சேவை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, இவை குறித்தும் உரிய அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் தேவை உள்ளது.

ஹோப் தோட்ட வைத்தியசாலையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு, புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையை மீள இயக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்' என்று அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .