2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

‘மலையகத்துக்கு இந்திய ஆசிரியர்’

Princiya Dixci   / 2017 மே 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மலையகத்தில் கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்குப் பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. இதற்கொரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மீபேயில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவனத்தில் இன்று (04) காலை இடம்பெற்ற பெருந்தோட்ட பாடசாலைகள் சம்பந்தமான கலந்துரையாடலின் பொழுதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் திருமதி சபாரஞ்சனி தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,

“தற்பொழுது மலையகத்தில் கணித மற்றும் விஞ்ஞான பாடசாலைகள் 25உம் அது தவிர மேலும் 35 பாடசாலைகளும் அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு வளங்களைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

“குறிப்பாக பாடசாலைகளின் கட்டட வசதி, மலசலகூட வசதிகள், நீர் வசதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் போன்ற விடயங்களைப் பூர்த்தி செய்ய முடியும்.

“ஆனால், கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொண்ட பொழுதும் அது எதுவும் நிறைவு செய்ய முடியவில்லை.

“வடக்கு, கிழக்கிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. ஒய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்தோம். அதுவும் முடியாமல் போய்விட்டது. எனவே, இதற்கு என்ன தீர்வு என்று யோசித்த பொழுது, அண்மையில் நான் இது தொடர்பாக இந்தியத் தூதரகத்திடம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினேன்.

“அந்தக் கலந்துரையாடலின் பொழுது, இது தொடர்பான என்னுடைய கோரிக்கையை அதாவது, இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பெற்றுத் தர வேண்டுமென, அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதனை செய்ய முடியுமென அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

“இந்த விடயம் தொடர்பாக முறையாக மகஜர் ஒன்றை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். நாம் மகஜரை தற்பொழுது தயாரித்து வருகின்றோம். மிக விரைவில் இதனை இந்தியத் உயர்ஸ்தானிகரிடம் நான் கையளிக்கவுள்ளேன்.

“எனவே, அந்த ஆசிரியர்களைப் பெற்றேனும் எமது இந்தப் பிரச்சினைககுத் தீர்வு காண வேண்டும். ஏனெனில், நாம் இதனை பேசிக் கொண்டு இருப்பதால் எந்தவிதமான பயனும் இல்லை. இந்திய ஆசிரியர்களின் வருகையின் மூலமாக எமது இந்த 25 பாடசாலைளையும் அபிவிருத்தி செய்ய முடியுமென நான் எதிர்பார்க்கின்றேன்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .