-எம்.எம்.எம். ரம்ஸீன்
உடுநுவர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு பதின்மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
எலமல்தெனிய மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தெல்லங்கை மஸ்ஜிதுல் லாஹ்லா பள்ளிவாசல் என்பவற்றிலேயே இக்கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் நேற்றிரவு இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் புகுந்த கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காட்டி பதின்மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.
பள்ளிவாசலின் வாசலினை உடைத்துக் கொண்டு பள்ளிவாசலினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் பள்ளிவாசலின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.
இப்பள்ளிவாசலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்ததும் அடகு கடன் முறைமையின் கீழ் வைக்கப்பட்டிருந்ததுமான பொதுமக்களின் நகைகள் மற்றும் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரொக்கப் பணம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நகைகளில் சுமார் 25 பவுண் பெறுமதியான தங்க மாலைகள், வளையல்கள் உட்பட ஆபரணங்கள் என்பனவும் அடங்கியுள்ளன.
இக்கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையர்கள் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தையும் சேர்த்து கழற்றி எடுத்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் நேற்றிரவு தெல்லங்கை மஸ்ஜிதுல் லாஹ்லா பள்ளிவாசலில் யன்னலை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர்கள் பள்ளிவாசல் உண்டியலை உடைத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தவுலகல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.