2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காணாமல்போன சிறுமி சடலமாக மீட்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு
 
நுவரெலியா மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த சிறுமி இன்று சனிக்கிழமை காலை தேயிலை காட்டுக்கு அருகில் உள்ள நீரோடை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் நிவேதா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
இன்று காலை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பத் ஹேவாவசம் சடலத்தை பார்வையிட்டதோடு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலைக்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.
 
இதனை தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டு நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 
நேற்று முன்தினம் குறித்த பகுதியில் சிறுமியை தோட்ட பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தேடிய பொழுதும் சிறுமி அகப்படவில்லை. இன்று அதிகாலைவேளையிலேயே சிறுமியை அங்கு யாரோ கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. மோப்ப நாய்கள் சகிதம் பொலிஸார் குறித்த பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இது தொடர்பில் தெரியவருவதாவது,
 
குறித்த சிறுமி நேற்று முன்தினம் மாலை பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியபின்பு வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். தாயார் பிள்ளையை வீட்டிற்கு அழைத்தபொழுது பிள்ளையை காணவில்லை என தெரியவந்துள்ளது. பின்பு அயலவர்களின் உதவியுடன் பிள்ளையை தேட ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் பிள்ளை கிடைக்கவில்லை.
 
கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் மாகாஸ்தோட்ட கீழ் பிரிவு மேல்பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த தோட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிள்ளையை தேடியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து விசேட அதிரடிப்படையினரும் பிள்ளையை தேடிவந்ததோடு கடந்த வெள்ளிக்கிழமை இரவுவரை பிள்ளையை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
குறித்த சிறுமி மாகாஸ்தோட்ட பிளக்பூல் சென் அந்தனீஸ் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுள்ளார். சிறுமிக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். தொடர்ந்தும் சிறுமி தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .