
-ஆர்.ராஜேஸ்வரன்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடக்கும்புரை தோட்டத்தின் டொப் லோவர் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்பு அறைகள் சேதமடைந்தன.
வெள்ளிக்கிழமை பகல் தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் லயன் பகுதியில் தீ ஏற்பட்டதினால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கூச்சலிட்டதினால் மலையில் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் அயவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயறிசிகளை மேற்கொண்டனர்.
எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. பெருமளவிலான வீட்டுபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், சிறிது சிறிதாக சேகரித்த தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கு இரையாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 26 குடும்பங்களை சேர்ந்த 122 பேர் தற்காலிகமாக மடக்கும்புர கலாபொவனம் இலக்கம் 1 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39 சிறுவர்களும் 4 குழந்தைகளும் உள்ளதாக இப்பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார். இந்த தீ விபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என பொது மக்கள் தெரிவிக்கும் நிலையில் தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கான அவசர உதவிகளாக உணவு பொருட்கள், உடைகள், பாய் மற்றும் போர்வைகளை கொத்மலை பிரதேச சபை, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், செச்சிலுவை சங்கம் மற்றும் தோட்ட முகாமை என்பன வழங்கியுள்ளன.