-இ.அம்மார்
ஜனாதிபதி செயலகத்தின் செயற்திட்டத்தின் கீழ் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடவடிக்கையின் பிரகாரம், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தல்கஸ்பிடிய மொரக்வத்த பிரதேசத்திலுள்ள குடியேற்றக் காணியில் ஆறரை ஏக்கர் காணி நிலப்பரப்பில் வாழும் 42 குடும்பங்களின் காணி உரிமையை, கண்டி பத்னி தேவாலயத்திற்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் காணிசீர்திருத்தக் குழுவின் அதிகாரிகள், கண்டி பத்னி தேவாலயத்தின் நிலமே, ரிதிகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேவேளை இக்குடியேற்றக் காணியில் 42 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 40 முஸ்லிம் குடும்பங்களும் 2 சிங்களக் குடும்பங்களும் வாழ்கின்றனர். காணி சுவீகரிப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தக் காணி, 1976ஆம் ஆண்டு ஸ்ரீ. சு. கட்சியின் ஆட்சிக் காலத்தின் போது ஸ்ரீ. சு. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமரபாலவினால் இம்மக்களுக்கு குடியிருப்புக்காக கிராம அபிவித்தி திட்டத்தீன் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக இப்பிரதேச வாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்வு எந்தவிதமான முன்னறிவித்தலோ பரிசீலனையோ இன்றி இக்காணியின் உரிமையை கையளிப்பதையிட்டு இக்கிராம முஸ்லிம் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி ஆழ்ந்த கவலையுடன் உள்ளனர். இக்காணி விடயமாக ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி இக்காணி குடியிருப்பாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க பிரதேசவாசிகள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.