2025 ஜூலை 09, புதன்கிழமை

சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் திட்டமிட்ட முறையில் புறக்கணிப்பு

Kogilavani   / 2015 மே 06 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

நுவரெலியா மாவட்ட செயலளார் காரியாலயத்தில் புதிய தேர்தல் முறை தொடர்பான கலந்துரையாடல் நடைபெறுகின்ற பொழுது சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதாக நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய மாநகர சபையின் உறுப்பினருமான எல்.நேருஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புதிய தேர்தல் முறை தொடர்பாக இன்னும் பலர் சரியான தகவல்கள் தெரியாமல் உள்ளனர். ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உடனடியாக 20ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. இதன்மூலம் நிச்சயமாக சிறுபான்மை மக்களுக்கு பாரிய பாதிப்பு எற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதற்கு சிறந்த உதாரணமாக நுவரெலியா மாநகர சபையை குறிப்பிடலாம். நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தற்பொழுது புதிய தேர்தல் முறைக்கு அமைய தொகுதி பிரித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்பிரகாரம் மாநகர சபையில் உள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். காரணம் புதிய முறைக்கு அமைய 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதில் 12 பேர் மக்களின் வாக்குகள் மூலமும் மிகுதியாக உள்ள 3பேர் கட்சிகள் மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இந்த அடிப்படையில் எமது சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவதற்கான சந்தர்ப்பமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மூலமாகவே சிறுபான்மை மக்களின் உரிமைகளும் வாக்குரிமைகளும் பாதுகாக்கப்பட்டன. எனவே, தொடர்ந்தும் அந்த உத்தரவாதம் எமக்கு வழங்கப்படவேண்டும்.

புதிய தேர்தல் முறை தொடர்பான கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நடைபெறுகின்ற பொழுது எமக்கு உரிய அறிவித்தல் வழங்கப்படுவதில்லை. கூட்டம் 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தால் எமக்கு 9.50 மணிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் அழைப்புவிடுக்கின்றார்கள். அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு அதில் கலந்துகொள்ள முடியாத ஒருநிலை ஏற்படுகிறது. எம்மை திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர்.

எமது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது கட்சி பேதங்களை மறந்து மாவட்ட செயலாளருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாட வேண்டும். புதிய தேர்தல் முறைமை சட்டமாக மாறுவதற்கு முன்பு அது தொடர்பாக நாம் எமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதைவிடுத்து இவை சட்டமாக மாறிய பின்பு நாம் அறிக்கைவிடுவதும் போராட்டம் நடத்தப்போவதாக கூறுகின்ற விடயங்கள் எல்லாம் தேவையற்ற விடயங்களாகவே இருக்கும்.

கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல் எல்லாம் முடிந்த பின்பு கதைப்பதில் எந்தவிதமான பயனும் இல்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .