எம்.செல்வராஜா
உள்ளுட்சிமன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடானது, தாம்பூலத்தில் வைத்துக் கிடைத்ததல்ல என்று தெரிவித்த பதுளை மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவி வி.சந்திரா, பல்வேறுப் போராட்டங்களின் பின்னரே கிடைத்தது என்றும் எனவே அந்த இடஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் வகையில் தற்போது உள்ளுராட்சிமன்றங்களில் அங்கம்வகிக்கும் பெண் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பதுளை மாவட்டத்திலுள்ள ஒன்பது உள்ளுட்சிமன்றங்களில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு, பதுளை ஹெரிடேஜ் விடுதியில் நடைபெற்றது.
பதுளை மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் நடத்தப்பட்ட இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,
மக்களால் தெரிவான பெண் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் உரையாற்றும் போது, எவ்வித அச்சமுமின்றி உரையாற்ற வேண்டும் என்றும் இன, மத, கட்சிப் பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பெண்கள் பிரதிநிதித்துவங்கள், தாம்பூலத்தில் வைத்துக் கிடைத்ததல்ல என்றும் பல்வேறுப் போராட்டங்கள், அழுத்தங்களுக்கூடாகவே, உள்ளுராட்சிமன்றங்களில் 25சதவீத இடஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகள் இடம்பெறுமேயானால், அதனை பெண் உறுப்பினர்கள் வெளிக்கொணர வேண்டும் என்றும் தூய்மையான அரசியல் கலாசாரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ழல், மோசடிகளுக்கு பெண் பிரதிநிதிகள் எவ்வகையிலும் துணைப்போக மாட்டார்களென்பதால் உள்ளுராட்சி மன்றங்களில் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக, பல்வேறு சம்பவங்கள் இடம்பெறலாம் என்றும் இவற்றை எதிர்கொள்வதற்காக பெண் உறுப்பினர்கள் தனி அமைப்பாக இருந்து செயற்படல் வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
செயலமர்வின் இறுதியில், 11 பேர் கொண்ட செயற்பாட்டுக் குழுவொன்று தெரிவுசெய்யப்பட்டது.
தமிழ், சிங்கள பெண் உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
மேற்படிக் குழுவானது, பெண் உறுப்பினர்களைப் பாதுகாத்தல், அவர்களது உரிமைகளை மேலோங்கச் செய்தல், அநீதிகளை எதிர்த்துச் செயற்படல், பயிற்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளது.