2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

3 அம்சக் கோரிக்கை சுற்றுப்பயணம்: பிரதாபனுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.கௌசி 

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துமாறும் லயன் வீடுகளை ஒழித்து, தனி வீட்டுத்திட்டங்களை வழங்குமாறும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, தனிப்பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்றும், 3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபனுக்கு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் வைத்தே, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 10ஆம் திகதி தனது சைக்கிள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.

வவுனியா, அநுராதபுரம், தம்புளை, கண்டி, கொழும்பு, காலி, கதிர்காமம் ஊடாக இரத்தினபுரிக்குச் சென்று, கடந்த 23ஆம் திகதி ஹட்டனை வந்தடைந்தார். அன்றைய தினம் மாலையே, தலவாக்கலையை வந்தடைந்தார். இதன்போது, தலவாக்கலை நகரில் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில், பொதுமக்கள் பலர், சைக்கிளை மறித்து, அவருடன் உரையாடியுள்ளனர்.

இதன்போது, இவ்விடத்துக்கு லொறியொன்றில் வந்த நபரொருவர், இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதாபனை, தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து மிரட்டியுள்ளார். அதுமாத்திரமல்லாது, தனது அலைபேசியில், வேறோரு நபருக்குத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தாகவும் அலைபேசியில் உரையாடிய நபரும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகவும் தெரியவருகின்றது.

“சம்பளப் பிரச்சினை, எமது பிரதேசத்தில் நிலவும் பிரச்சினை; இதில், நீ தலையிட வேண்டாம்; ஊருக்கு ஊர் செல்வதைக் கைவிட்டு விட்டு, வவுனியாவுக்கு ஓடிவிடு;

இல்லையேல், கைகால்களை உடைத்துவிடுவோம்; தலவாக்கலை நகரசபை மைதானத்துக்கு வா; அங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளோம்” என்று அலைபேசியில் உரையாடிய நபர் மிரட்டல் விடுத்ததாக, பிரதாபன் தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்த மக்களைச் சந்தித்துவிட்டு, பொலிஸ் அதிகாரியொருவரின் பாதுகாப்புடன், நுவரெலியாவை நோக்கிப் பயணித்த அவர், நானுஓயா ஊடாக, நேற்று (25), நுவரெலியாவை வந்தடைந்தார்.

இவர், நுவரெலியாவிலிருந்து, வெலிமடை, பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் வழியாக, மீண்டும் வவுனியாவுக்குச் செல்லவுள்ளார்.

இதேவேளை, தனது தனி மனிதக் கோரிக்கை தொடர்பாக, வரும் வழியெங்கும் பொதுமக்களிடம் தெரிவித்து வருவதாகவும் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, தீர்வு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .