2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’இணைந்துச் செயற்படுவது அவசியம்’

Kogilavani   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அரசமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதில், சிறுபான்மைக் கட்சிகள் இணைந்துச் செயற்படுவது அவசியம் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மலையக மக்கள் முன்னணி, புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழுவிடம் தங்களுடைய யோசனைகளை, அண்மையில் சமர்ப்பித்தது என்றும் தமது முன்மொழிவுகளில், சிறுபான்மை மக்களான மலையக மக்கள், வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதேபோன்று ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும், சிறுபான்மை மக்கள் அந்தந்தப் பகுதிகளில் எதிர்நோக்குகின்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி, தங்களுடைய யோசனைகளை முன்வைக்கின்ற போது, அவற்றையும் உள்ளடக்க முடியுமாக இருந்தால், அரசமைப்பு சீர்திருத்தத்தில் இவ்வாறான முன்மொழிவுகள் ஓர் அழுத்தத்தைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  

'இன்று இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களுடைய உரிமைசார்பான பிரச்சினைகள் ஒவ்வொருநாளும் அதிகரித்து வருகின்றன. அதேபோல ஜனாஸா விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. 

'கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முடியும் என்று, பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அமைச்சர்கள் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறுகின்றார்கள். இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளவர்கள் நல்லடக்கம் செய்யமுடியும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். எனவே முன்னுக்குப் பின் முரணான விடயங்கள் நடைபெறுகின்றன.

'மறுபுறுத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களின் அடையாளங்களை இல்லாது செய்வதற்கு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன.

மேலும் மலையக மக்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. இவ்வாறான பல பிரச்சினைகளை, சிறுபான்மை மக்கள் முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

'எனவே நாம் அனைவரும் இணைந்துச் செயற்படாவிட்டால் பல விடயங்களை வெற்றிக்கொள்ள முடியாமல் போய்விடும். எங்கள் அனைவருக்கும் தனித்தனியான அரசியல் இருக்கின்றது. ஆனால் பொதுவான விடயங்களில் நாம் இணைந்துச் செயற்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் எதனையுமே பெற்றுக்கொள்ள முடியாது.

'நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. இதன்மூலமாக சிறுபான்மை மக்கள் உயரிய பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டியது அவசியம்' என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X