Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் வாழ்வியல் அபிவிருத்தி குறித்து, இந்தியாவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
'மலையக மக்கள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சினைகளாக வீட்டுப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, தொழில்வாய்ப்பு பிரச்சினை காணப்படுகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் இவற்றுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்'என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இந்திய வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
'இந்தியா, இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளது. 1815ஆம் ஆண்டு கண்டி இராஜியத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதன் பின்னர், இந்தியா வம்சாவளிகளை இலங்கைக்கு அழைத்து வந்ததுடன் அம்மக்களை, காடு, மலைகளை குடைந்து புகையிரத வீதிகள், வாகனம் செல்லும் வீதிகளை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தினர்.
சுமார் 200 வருடங்களின் பின்னர் இம்மக்களுக்கு பெருந்தொகையான வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து கொடுக்க முன்வந்துள்ளது' என அவர் கூறினார்.
'மலையக மக்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் மூன்று பிரதான பிரச்சினைகளாக வீடமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு என்பன காணப்படுகின்றன.
இம்மக்களுக்கு தனி வீடுகளை அமைத்துக்கொடுத்து அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று, ஒரு சமூகம் மேலோங்க கல்வி அறிவு முக்கியமாக அமைகின்றது. இம்மக்கள் எதிர்கொள்ளும் கல்விசார் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். படித்துவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பும் தனியாக தொழில் செய்யும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரும் அதேவேளை, இதற்கான தீர்வை பெற்றுத்தரவேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவை கேட்டுக்கொள்கிறேன்' என அவர் மேலும் கோரியுள்ளார்.
அத்தோடு இலங்கையின் கல்வி வளர்ச்சி முன்னேற்றத்துக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கும் இந்தியா, மலையக கல்வி வளர்ச்சிக்கும் பாரிய நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இதனால் பல பாடசாலைகள் அபிவிருத்தி ரீதியில் முன்னேற்றம் அடையும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எனவே இவ்வாறாக எம்மை அபிவிருத்தி ரீதியில் முன்னேற்றமடைய செய்து, கௌரவத்துடன் வாழும் வாழ்க்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவிகளை நாம் நன்றியுடன் வரவேற்கின்றோம்' என தனது உரையில் அவர் மேலும் கூறினார்.
45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago