2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரண்டாம்கட்ட பேச்சு தோல்வி; பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

Kogilavani   / 2021 மார்ச் 17 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலை மாகுடுகலை, கிளன்டெவன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக, நுவரெலியா தொழில் திணைக்களத்தில், நேற்று முன்தினம் (16) காலை முன்னெடுக்கப்பட்ட இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இதனையடுத்து கடந்த பத்து நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்த மேற்படி இரண்டு தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

தேயிலைத் தோட்டங்களில் காடாக வளர்ந்துள்ள புற்களை அகற்றி தாம் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை முன்வைத்து மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, முதற்கட்டப் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. 

எனினும் இந்தப் பேச்சுவார்த்ததையில் நிர்வாகத் தரப்பில் ஒருவரும் பங்கேற்காததால்  பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கமைவாக இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை, உதவித் தொழில் ஆணையாளர் திருமதி பமுனேந்திர முன்னிலையில், நேற்று முன்தினம் (17) நடைபெற்றபோது, தேயிலை மலைகளில் பரவியுள்ள புற்களை அகற்றுவதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தோட்ட  அதிகாரி இமேஸ் பத்திரன தெரிவித்தார். 

விசமற்ற தேயிலை உற்பத்தி இத்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதால், தொழிலாளர்கள் கூறுவதைப் போன்று புற்களை அழிப்பதற்கு களைநாசினிகளைப் பயன்படுத்த முடியாது என்றும் தோட்ட அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு தொழிலாளர்கள் இணங்க மறுத்துள்ளதுடன், புற்களை அழிப்பதற்கு களைநாசினி பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அதிகாரியை கோரியுள்ளனர்.

எனினும் தோட்ட அதிகாரி இதற்கு இணங்க மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே தமது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்வரை தாம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X