2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு வசதிகளுக்கு வாய்ப்பு

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஊவா மாகாண சபை அமர்வின்போது, செய்தி சேகரிக்க வரும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊவா மாகாண சபைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச உறுதியளித்துள்ளார்.    

ஊவா மாகாணசபை அமர்வு  சபைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில், சபை மண்டபத்தில் புதன்கிழமை (29) நடைபெற்றபோது, மாகாண சபையின் உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக உரையாற்றிய சமந்த வித்தியாரட்ண, 'ஊவா மாகாண சபையில், ஊடகவியலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த அலுவலகமொன்று தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்த வசதி வாய்ப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன' என்றார்.  

'இதுவரை ஊவா மாகாண முதலமைச்சர்களாக இருந்த சமரவீர வீரவன்னி, ஏ.எம்.புத்திதாச, விஜத் விஜித முனிசொய்சா,
ஷசிந்திர ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளான நாம், மக்களுக்கு சேவையாற்றும்போது, அச்சேவை மக்களைச் சென்றடைய ஊடகவியலாளர்கள் பெரும் பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். அத்துடன், மாகாண அபிவிருத்திக்கும் மக்களின் சமூக நல மேம்பாடுகளுக்கும் ஊடகவியலாளர்கள் ஆற்றும் சேவை அளப்பரியன. அப்பெறுமதியை வார்த்தைகளினால் அளவிட முடியாது.

எனவே, ஊவா மாகாண சபையில், ஊடகவியலாளர்களுக்குரிய அலுவலகம் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது' ஊவா மாகாணசபையின் கடப்பாடாகும்' என்றார்

சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச தனது பதிலுரையில் 'நான் முதலமைச்சராக இருக்கும்போது ஊடகவியலாளர்களுக்கு வசதிகளை செய்துகொடுத்துள்ளேன். அவர்களுக்கான வசதிகள் இல்லாமல் செய்யப்பட்டமை இதுவரை எனக்குத் தெரியாது.  எனவே, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என்றார்.

'அத்துடன் சபை அமர்வுகளின்போது அவர்களுக்கான மொழிபெயர்ப்பு வசதிகளையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன்' என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .