2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரமாக்க வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா           

ஊவா மாகாணப் பாடசாலைகளுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட ஊழியர் நியமனங்கள், அடுத்த மாதம் 6ஆம் திகதியுடன் காலாவதியாகின்றன. அதனை தடுத்து நிறுத்தி, அவ் ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென்று, ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

ஊவா மாகாண சபையின் அமர்வு, சபையின் பிரதான மண்டபத்தில், சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ் அமர்வில், ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் கலந்து கொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

'கடந்த ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் திகதி, ஊவா மாகாண பாடசாலைகளில் காவலாளி, வாசிகசாலை ஊழியர்கள், ஆய்வுகூட ஊழியர்கள் என்ற வகையில் ஒருவருட தற்காலிக ஒப்பந்த அடிப்படை பிரகாரம் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமனங்களின் சேவைக்காலம் அடுத்த மாதம் 6ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது.

இந்நிலையினால், அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆகவே, அத்தகையவர்கள் விடயத்தில், ஊவா மாகாண சபை கூடிய கவனம் எடுத்து, அவர்களை மீளவும் ஒப்பந்த அடிப்படையில் சேவை நிரந்தரமாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

ஊவா மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் விமல் கலங்கமராய்ச்சி தமதுரையில்,

' நாடு இன்று வங்கரோத்து நிலையினை எதிர்கொண்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. பெரும் ஏமாற்றத்துடன் சொல்லொண்ணாத்துயரினை, மக்கள் அடைந்து வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை விட, ஜே.வி.பி.யினரே புதிய ஆட்சியை உருவாக்க வக்காளத்து வாங்கி செயற்பட்டனர். தற்போது அவர்களே புதிய ஆட்சிக்கெதிராக பல்வேறு விமர்சனங்களை தொகுத்த வண்ணமுள்ளனர்.

இன்று மக்கள் படும் துயரங்களுக்கு ஜே.வி.பி யினர் பதில் கூறியே யாக வேண்டும்.
'வெட்' அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்றனர். அமைச்சர்களுக்கெதிரான எதிர்ப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நாட்டில் எவ்வித அபிவிருத்தி செயற்பாடுகளும் இல்லாதுள்ளன.

இந்நாட்டை, அழிவிலிருந்து மீட்க மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஆட்சியை அமைக்க வேண்டும். தற்போது மக்கள் நிலைமையை உணர்ந்துள்ளனர். நடைபெறப்போகும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் அபார வெற்றியை அடைவது தின்னம். அத்தகைய அலை தற்போது எழுந்துள்ளது. இந்நாட்டை வழிநடாத்தக்கூடிய சிறந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே என்பது, தற்போது உறுதியாகியுள்ளது' என்றார்.

சபை உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய தமதுரையில்,

'எமது மாகாணத்துக்கு, வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இவர்கள் நோய்வாய்ப்படுகையில், எமது மாகாண அரசினர் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவ்வேளையில், அவர்களிடம் கட்டணம் பெற்று சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டமொன்றினை, எமது மாகாண அரசினர் மருத்துவமனைகளில் முன்னெடுக்க வேண்டும். அதற்கென, தனிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

நாம் கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள அரச மருத்துவமனைகளில் பணம் வழங்கியே, நாம் சிகிச்சை பெற வேண்டும். அது போன்றதோர் நிலையினை, எமது மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தமதுரையில்,

' நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கும் ஆசிரிய உதவியாளர்களுக்கு மாதக் கொடுப்பனவாக ஆராயிரம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனை பதினாராயிரம்  ரூபாவாக உயர்த்த பரிந்துறைகளை வழங்கியுள்ளேன்.

அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஊழியர்கள் 120 பேரின் சேவையை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கவும் திட்டமிட்டிருக்கின்றேன்.

சிறுநீரக நோயாளாளர்களுக்கு இதுவரையில் வழங்கி வந்த ஆயிரம் ரூபா உதவிப்பணத்தை, மூவாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளேன்.

உடுவரை தோட்ட மக்களின் நன்மை கருதி மூடப்பட்டிருக்கும் உடுவரை தேயிலைத் தொழிற்சாலையை, மீண்டும் திறக்க நடவடிக்கைகளை எடுத்துவருகின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .