
எம்.செல்வராஜா
ஊவாவில் வேறாக இயங்கிய தமிழ் மற்றும் சிங்கள கல்வி அமைச்சு, விசேட வர்த்தமானி மூலம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது
ஊவா மாகாண போக்குவரத்து அமைச்சின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டுவந்த ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து மீண்டும் அமுலுக்கு வரும் வகையில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்த விசேட வர்த்தமானி (2219/54) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலால்; வெளியிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதுளை தமிழ் மகளிர் கல்லூரி அதிபருக்கும் அப்போதைய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஊவா மாகாண கல்வி அமைச்சுக்கு கீழ் செயற்பட்ட ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு விசேட வர்த்தமானி மூலம் ஊவா மாகாண போக்குவரத்து அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதன்போது செந்தில் தொண்டமான் குறித்த அமைச்சுக்கு பொறுப்பாக கடமையாற்றினார்.
2018 முதல் ஊவா மாகாண போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு, எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி முதல் திருமதி சந்தியா அபன்வெல செயலாளராக கடமையாற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.