2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’ஓல்டன் மக்களுக்கு துணை நிற்போம்’

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

சாமிமலை ஓல்டன் தோட்ட விவகாரத்தை தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லவுள்ளதாக, புதிய ஜனநாய மாக்சிச லெனினிசக் கட்சி அறிவித்துள்ளது. 

நியாயம் கிடைக்கும்வரை மேற்படித் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தாம் துணைநிற்கவுள்ளதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சாமிமலை ஓல்ட்டன் தோட்ட அதிகாரி மீது 74க்கும் அதிகமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள தொழிலாளர்கள், தோட்ட அதிகாரிகளை தோட்டத்தில் இருந்து வெளியேற்றக் கோரி, கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில் தோட்ட அதிகாரி வெளியாரை தொழிலுக்கு அமர்த்தியதால், அதனைத் தட்டிக்கேட்க அதிகாரியின் வீட்டுக்குச் சென்ற தொழிலாளர்கள், அதிகாரிகள் மீது சாணம் கலந்த நீரை ஊற்றி தாக்கியும் உள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த தோட்ட அதிகாரிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பெண்கள், ஒரு ஆண் தொழிலாளி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் கோரிக்கை உள்ளிட்ட போராட்டத்துக்கு தீர்வொன்றை எட்டும் வகையில் ஹட்டன் தொழில் திணைக்களத்தில், நேற்று முன்தினம் (1) காலை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு உதவிதொழில் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தோட்ட நிர்வாகம் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.
இதனால் இவ்விவகாரத்தை இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, மேற்படித் தோட்ட விவகாரத்தை தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லவுள்ளதாக, மார்க்சிச லெனினிசக் கட்சி அறிவித்துள்ளது.  

இது தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் கருத்துரைக்கையில், தொடர்ந்து மூன்று வருடங்களுக்கும் மேலாக குறிப்பிட்ட இரண்டு அதிகாரிகளும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டினார். 

குறித்த இருவரும், பல புதிய நடைமுறைகளைப் புகுத்தி தொழில்ரீதியாக பழிவாங்கள்களை மேற்கொண்டு வந்துள்ளனர் என்றும் அத்தோடு பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். 

இதுவரை 74க்கும் மேற்பட்ட அடக்குமுறைகள் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுள்ளன எனச் சுட்டிக்காட்டியதுடன், பல தொழிலாளர்கள் தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். 

இந்தப் பின்னணியில், தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள் என தெரிவித்தார்.

தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் நிலையில், பிராந்திய தொழில் காரியலயத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பேச்சுவார்தைகளையும் தோட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது என்றும் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான போக்கை தாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, தோட்ட நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்தைக்கு வருவதையும் உடன்பாட்டுக்கு வருவதையும் நிராகரிக்குமாயின் இப்பிரச்சினையை தொழில் ஆணையாளரின் கவனத்துக்குக்குக் கொண்டுசெல்ல தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  

அத்தோடு 25 நாட்களுக்கு மேலாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உறுதியுடன் போராடிவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் குறல்கொடுப்பதற்கு மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X