2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சுண்ணாம்பால் கொந்தளிப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், செ.தி.பெருமாள்

பொங்கல் பண்டிகைக்காக வீடுகளுக்கு வெள்ளையடிப்பதற்கு, தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்படும் சுண்ணாம்பு பக்கற்றுகள் இம்முறை, முறையாக வழங்கப்படவில்லை என சில தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகத்தின் சலுகைகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரிய தோட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், திங்கட்கிழமை(11) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை பாமஸ்டன் ரட்ணகிரிய தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் அனைத்தையும்  தோட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்துவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு   தமது வீடுகளுக்கு வர்ணம் பூசுவதற்காக  தோட்ட நிர்வாகங்களினால்  தொழிலாளர் குடும்பமொன்றுக்கு ஒவ்வொரு வருடமும் 8 பைக்கற்றுகள் சுண்ணாம்பு, 8 பைக்கற்றுகள் நீலம், 2 தூரிகைகள் வழங்கப்படும்.

ஆனால், மேற்படி தோட்டத்தில் இம்முறை  தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு 6 பைக்கற்றுகள் சுண்ணாம்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 60 வயதை பூர்த்திசெய்யாமல் இடையிலேயே வேலையை விட்டு விலகிய தொழிலாளர்களுக்கு 4 பைக்கற்றுகள் சுண்ணாம்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

வேலையில்லாதவர்களுக்கு சுண்ணாம்பு பைக்கற்றுகளை குறைத்து வழங்குமாறு  தோட்டக்கம்பனி தங்களுக்கு பணித்துள்ளதாக  தோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால்  தோட்டத்தில் வேலைசெய்து இடையிலே வேலையை விட்டு விலகிய தொழிலாளர்களுக்கு வழமையாக வழங்கப்படும் சுண்ணாம்பு பைக்கற்றுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனவே, தமக்கு உரிய சலுகைகளை முறையாக வழங்குமாறு கோரி மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்ட 4 ஆம் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் சுண்ணாம்பு பக்கற்றுகள் இம்முறை வழங்கப்படவில்லை என அத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .