2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை: இழுத்தடிப்பது திட்டமிட்ட செயல்

Kogilavani   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'24 மாதங்களுக்கு நடைமுறைக்கு வரப்போகும் சம்பளவுயர்வு கூட்டு ஒப்பந்தம் ஒன்றைப் புதுப்பிப்பதற்கு 9 மாதங்கள் காலம் கடத்துவது திட்டமிட்ட செயற்பாடாகும். இது ஒப்பந்த காலத்தின் மூன்றில் ஒரு பகுதியாகும்' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், திங்கட்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பது திட்டமிட்ட செயலாகும். இதனால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சம்பள உயர்வு ஒப்பந்த இழுத்தடிப்பினால், முன்னைய கூட்டு ஒப்பந்த அடிப்படையிலேயே தொழிலாளர்கள் கடந்த ஒன்பது மாதங்களாகச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

பொருளியல் நோக்கில் பார்க்கும்போது ழுppழசவரnவைல உழளவ எனும் அடிப்படை பொருளியல் தத்துவமான அமையச்செலவின் அடிப்படையில் தொழிலாளர்களுக்குப் பாரிய அளவு வருமான இழப்பு வருகிறது. இந்தத் தொகை தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கடந்த ஒன்பது மாத கால இழுத்தடிப்பில் கம்பனிகள் நன்மைகளை பெற்றுக்கொள்கின்றன. எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என எதிர்ப்;பார்க்கப்படும் சம்பள அதிகரிப்பின் ஒரு பகுதியை இந்த இழுத்தடிப்பின் மூலம் கம்பனிகள் சிக்கனமாக்குகின்றன.

எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு, கீழ்குறிப்பிட்டுள்ள மூன்று விடயங்களில் அதிகூடிய கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1. 'கூட்டு ஒப்பந்தம்' செய்யப்படும் கால இடைவெளி நிச்சயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது இரண்டு வருடத்தின் பின்னர் ஒப்பந்த காலம் முடிவடையும் போது அடுத்த ஒப்பந்தம் செய்யப்படும் காலம் நிச்சயமானதாக தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

2. கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் 75 சதவீத வரவு இருந்தால் மாத்திரமே அவர்கள் வேலை செய்த முழு நாட்களுக்கும் அந்த வரவு கொடுப்பனவு  வழங்கப்படுவது நடைமுறையில் சாத்தியமற்றதாகும். எனவே, இந்தக் கூட்டு ஒப்பந்த முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

3. கடந்த இருபது வருடகாலமாக மூன்று தொழிற்சங்க அமைப்புகள் மாத்திரமே இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன. 40 சதவீதம்  அங்கத்தவர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களுடன் இந்த ஒப்பந்தம் செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 23 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தற்போது கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு மாத்திரம் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சட்ட வலிது உள்ளதா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. எனவே, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் சட்ட வலிது தன்மை தொடர்பில் மீளாய்வு செய்யப்படல் வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .