2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொழில் நீதிமன்ற உத்தரவு நிராகரிப்பு

Sudharshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் பதுளை தொழில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, இதுவரை  செயற்படுத்தப்படாமல் இருப்பது  தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆறுமுகம் முத்துலிங்கம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர வேண்டுகோள் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மொனராகலையிலுள்ள பிரஜா சக்தி மத்திய நிலையத்தில்; காவலாளியாக கடமையாற்றி வந்த சொக்கன் முருகதாசன் என்பவரை, கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் அங்கு சேவையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்கப்படாது, கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

காவலாளியாக இருந்த சொக்கன் முருகதாசன், பிரஜா சக்தி மத்திய நிலையத்தின் செயற்பாட்டினை ஆட்சேபித்து மொனராகலை உதவித் தொழில் ஆணையாளரிடம் முறைப்பாடொன்றினை பதிவு செய்தார். இம்முறைப்பாட்டுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக, பதுளை தொழில் நீதிமன்றத்திடம் இவ்விடயம் ஒப்படைக்கப்பட்டது.

பதுளை தொழில் நீதிமன்றில், மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தொழில் நீதிமன்றத் தலைவரும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய ஏ.எம்.ஏ.கருணாதிலக்க, குறித்த வழக்கை ஆராய்ந்து, முறைப்பாட்டின் உண்மைத்தன்மையை உணர்ந்தார்.

அதன் பிரகாரம் பாதிக்கப்பட்ட சொக்கன் முருகதாசனுக்கு இரண்டு இலட்சத்து பதினையாயிரம் ரூபாய் இழப்பீட்டினை வழங்கி அவர் ஏற்கனவே செய்த காவலாளி தொழிலை வழங்க வேண்டுமென்று அதனை கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதிக்கு முன் நிறைவேற்றப்படல் வேண்டுமென்றும், உத்தரவிட்டார்.

ஆனால், இவ் உத்தரவு, சம்மந்தப்பட்ட பிரஜாசக்தி மத்திய நிலையத்தினால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்டிருக்கும் சொக்கன் முருகதாசன், தமது வாழ்வாதாரத்தினையும்  தமது குடும்பத்தின் வாழ்வாதாரங்களையும் முன்னெடுக்க முடியாமல், பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார். எனவே, தாங்கள் இது விடயத்தில், கூடிய கவனம் செலுத்தி, பதுளை தொழில்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, நடைமுறைப்படுத்த, ஆவன செய்யுமாறு, தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .