2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தலவாக்கலை - லிந்துலை நகரசபை தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, டி.கௌசல்யா, எம்.கிருஸ்ணா

தலவாக்கலை - லிந்துலை நகரசபை தலைவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (5) நடைபெறவிருந்த நிலையில், சபைக்கு போதிய உறுப்பினர்கள் சமூகமளிக்காததன் காரணமாக, தலைவர் தெரிவு ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தெரிவித்தார்.

தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் தலைவராக இருந்த அசோக சேபால மீது முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளையடுத்து,  உடன் அமுலுக்குவரும் வகையில் அவர் தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் நகரசபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் எல்.பாரதிதாசன், இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே வெளியிட்டிருந்தார்.

இதன்பின்னர் அசோக சேபால மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த குழுவினரின் அறிக்கையில் அசோக சேபாலவை மீண்டும் தலைவராக நியமிக்கக் கூடாதென அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய தலைவர் தெரிவுக்கான தேர்தலை இன்று (5) நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், பலத்த பொலிஸ் பாதுகாப்போடு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் தலைவாக்கலை லிந்துலை நகரசபைக்கான  தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு  மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே வருகைத்தந்திருந்தனர்.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சி உறுப்பினர்களான சந்தன பிரதீப் குணதிலக, பஷான் நிமாலக,  பிரசன்ன விதானகே ஆகிய மூவரே வருகைத்தந்திருந்ததுடன் இம் மூவரும் நகரசபை தலைவருக்கான போட்டியாளர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர்களாக 11 பேர் உள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஒருவர்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் மூவர், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர், மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மற்றும் சுயேற்சை குழு உறுப்பினர்  ஒருவருமாக எட்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.  

இதனையடுத்து தேர்தலை நடத்தி தலைவரை தெரிவு செய்வதற்கான பெரும்பான்மை இல்லை என தெரிவித்த மத்தியமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேனக ஹேரத், எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு, தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் தெரிவுக்கான  தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X