2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்’

எம். செல்வராஜா   / 2020 மே 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தாக்கங்கள் குறித்து செயற்படுவதில் கூடிய கவனம் செலுத்தாத தற்போதைய அரசாங்கம், தேர்தலை நடத்தி வெற்றி பெறவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கொவிட்-19 தாக்கத்தில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில், இலங்கை இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என, சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஒரு மாயைக்குள் தள்ளி, நாடு அழிந்தாலும் பரவாயில்லை, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் பொது மக்கள் இல்லை, கடற்சிப்பாய்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களை நம்ப வைக்கும் வகையில், அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 23 மாவட்டங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளதை, சுகாதாரத் தரப்பினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் தொலைநோக்கு சிந்தனையற்ற வகையில் அரசாங்கம் மேற்கொண், வரும் இச்செயற்பாடுகளால், முழு நாட்டுக்கும் அபயாம் ஏற்பட்டு வருவதாக, சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடொன்றில் எதேச்சதிகாரச் செயற்பாடுகளுக்கு இம்மியும் இடம் கிடையாது என்றும் ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையை அவதானிக்கும் போது, நாம் ஜனநாயக விழுமியங்களில் இருந்து விடுபட்டு செல்லுகின்றோமோ என்ற சந்தேகம் வலுவடைவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டில் இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் முன்வரவேண்டும் என, அந்த அறிக்கையில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .