Kogilavani / 2017 ஜூலை 05 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
“தொழிலாளர் தேசிய முன்னணியும் அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், இது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிக்கு கிடைத்த அங்கிகாரம் என்றும் கூறினார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
“தொழிலாளர் தேசிய சங்கம், ஒரு காலத்தில் அரசியல் கட்சியாகவும் செயற்பட்டிருந்தது. எனினும், நயவஞ்சகமான முறையில் அந்த அங்கிகாரம் கைமாற்றப்பட்டது. தொழிலாளர் தேசிய சங்கத்தை தொழிற்சங்கமாக பொறுப்பெடுத்த தற்போதைய தலைமை, தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் பிரிவை ஆரம்பித்து அதனை செயற்படுத்தி வந்ததுடன், தற்போது அதனை அங்கிகரிக்கப்பட்ட கட்சியாகவும் பதிவுசெய்துள்ளது. இது தொழிலாளர் தேசிய முன்னணியின் அர்ப்பணிப்பான அரசியல் பயணத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
“தொழிலாளர் தேசிய சங்கம் 1965ஆம் ஆண்டு அமரர் வி.கே.வெள்ளையனால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமாகும். இதில் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளையும் இணைந்துகொண்டு அரச பணியாற்றினார். இக்கட்சி, 1990களின் ஆரம்பத்தில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர் தேசிய சங்கம் எனும் அரசியல் கட்சியின் மயில் சின்னத்தில், இரண்டு தடவைகள், மாகாண சபை ஆசனங்களும் வென்றெடுக்கப்பட்டன. பிரதேச சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
குறிப்பாக 1999இல் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில், மலையகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து “இந்திய வம்சாவளி மக்கள் பேரணி” என கூட்டாக போட்டியிட்டபோது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னமே உத்தியோகப்பூர்வ சின்னமாகவும் கட்சியாகவும் செயற்பட்டது.
மத்திய மாகாணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மனோ கணேசன் மேல்மாகாண சபை உறுப்பினராகவும் மயில் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தில், நயவஞ்வசகமான முறையில் உள்நுழைந்த சிலர், அதன் அரசியல் பிரிவை தேசிய ஜனநாயகக் கட்சி என மாற்றம் செய்து, பணத்துக்காக கைமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இந்த நிலையிலேயே, கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சர் திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தை பொறுப்பேற்றார். அமைச்சருடன் இணைந்த புதிய நிர்வாகத்தினர் தொழிற்சங்கத்தையும் அரசியல் பிரிவையும் புத்துயிர்ப்புடன் இயக்க ஆரம்பித்தோம். இதன்போது, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவை மீளப்பெறும் முயற்சி சட்ட ரீதியாக பலனிக்காத நிலையில், புதிய அரசியல் கட்சி ஒன்றை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவாக கட்டியெழுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரமே, தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சி உதயமானது. தொழிலாளர் தேசிய முன்னணி, அதன் முதலாவது மாநாட்டை 2009 ஆம் ஆண்டு நடத்தி வெற்றிக்கண்டது. அதன் பின்னர் கட்சியை பதிவுசெய்துகொள்ளும் முயற்சியில் மும்முரமாக இயங்கினோம். இந்நிலையிலேயே, தொழிலாள் தேசிய முன்னணி தற்போது, ஓர் அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எமக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கிகாரத்தை, கடந்த பத்து ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிக்கு கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகின்றோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சியாக செயற்படும் அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணி தனித்துவமான கட்சியாகவும் தொடர்ச்சியாக தனது பணிகளை முன்னெடுக்கும்.
கட்சியின் வளர்ச்சிப் பணியில் இணைந்திருக்கும் தோழமைகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணமாகும். செயலாளர் என்ற வகையில், அவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு, வருட இறுதிக்குள் கட்சியின் மாநாட்டை கூட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்றார்.
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago