Editorial / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
“பல வருட காலமாக, அடிமை வாழ்க்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்” என்று, ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா. பிரபாகரன் தெரிவித்தார்.
ஹட்டன் டி விலா விடுதியில், இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“1980ஆம் ஆண்டு தொடக்கம் 1981ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மலையக மக்கள் எவ்வாறாக அவல வாழ்க்கை வாழ்ந்து வந்தார்களோ, அதேபோன்று, இன்றும், ஒரு சதவீதம் கூட, அபிவிருத்தியோ முன்னேற்றமோ இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
“ஈரோஸ், 40 வருட காலம் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இன்று, ஈழவர் ஜனநாயக முன்னணியாக அரசியலில் தோற்றம் பெற்று, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
“இந்நாட்டில், வடக்கு, கிழக்கு, மலையகம் என, மூன்று பகுதிகளிலும், தமிழ் மக்களின் அடிமை வாழ்க்கையைப் போக்குவதற்காக, ஈரோஸ் அமைப்பு 40 வருட காலப் போராட்டத்தை முன்னெடுத்தது.
“மலையகத்தில், செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, நாம் மீண்டும் வந்துள்ளோம். இந்நிலையில், மலையக மக்களுடைய வாழ்வியல் முறையில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வர, மூன்று அம்சங்களைக் கொண்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
“லயன் வாழ்க்கை முறை ஒழிப்பு, நல்ல தலைமைத்துவம், தொழிலாளர்களை அரச ஊழியர்களாக்கி, மாதாந்த ஊதியத்தைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவையே, அந்த மூன்று கோரிக்கைகள் ஆகும். இந்த மூன்று கோரிக்கைகளை, ஈழவர் ஜனநாயக முன்னணி, 10 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றி முடிக்கும்.
“சுமார் 100 வருடங்களுக்கு மேலாக, மலையக தொழிலாளர்களின் சந்தா பணத்தை, மில்லியன் கணக்கில் பெற்றுக்கொண்டு, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வரும் மலையகத் தலைவர்கள், தொழிலாளர்களின் வாழ்வியல் மாற்றத்தில், எவ்வளவாக அக்கறைக் கொண்டுள்ளனர். ஒரூ சதவீதமாவது அபிவிருத்தியும் இல்லை. முன்னேற்றமும் இல்லை.
“இன்றும் கூட, 55, 56 வயதையுடைய தாய்மார்கள், காடு மலை ஏறி தேயிலை பறிக்கும் காட்சி, மாற்றம் பெறவில்லை. இந்நிலையில், இந்த மக்களிடத்தில், கலை, கலாசாரம் வாழ்வியல், பண்பாடு தொழில் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். ஒட்டு மொத்தமாக, மலையகம், வடக்கு, கிழக்கு போன்ற பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களின் அடிமை வாழ்க்கையில், மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
“இதற்காக, ஈழவர் ஜனநாயக முன்னணி களமிறங்கவுள்ளது. வடக்கு, கிழக்கில், தேனீர் பருக வேண்டுமென்றால், அது மலையக மக்களின் உழைப்பின் இரத்தமாகவே காட்சியளிக்கின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாகத் திகழ்கின்ற மலையக மக்களின் வாழ்வியல் முறையை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
“கடந்த வருடம், அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு, 5,000 ரூபாயும் தனியார் ஊழியர்களுக்கு, 2,500 ரூபாயும் தருவதாகத் தெரிவித்த போதிலும் அரச ஊழியர்கள் மற்றும் நிறுவனச் சேவையாளர்கள், இத்தொகையைப் பெற்றார்கள். பெருந்தோட்டம் தொழிலாளர்களும், நிறுவனத் தொழிலாளர்கள் தானே. அந்தத் தொழிலாளர்களுக்கு, 2,500 ரூபாய் கிடைக்க பெற்றதா? என்ற கேள்வி, இங்கு எழுகின்றது.
வடக்கு, கிழக்கில் நல்ல கல்விமான்கள் இளைஞர், யுவதிகள் ஈழவர் ஜனநாயக முன்னணியுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். இவர்களின் சக்தியைக் கொண்டு, மலையகத்திலும் முன்னணியை வலுப்படுத்தி, மலையக மக்களின் விடுதலையை 10 வருட காலப்பகுதியில் பெற்றுக்கொடுப்போம் என உறுதிளிக்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
46 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago