2026 ஜனவரி 21, புதன்கிழமை

’பெருந்தோட்ட மக்களைதேசிய நீர்வழங்கல் திட்டத்தில் உள்வாங்கவும்’

Kogilavani   / 2021 மார்ச் 30 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பெருந்தோட்டப் பகுதிகளில் நீர் ஊற்றுக்கள், நீர்நிலைகள் அதிகமாக இருந்தாலும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத அவலநிலை இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார்,

இதனை நிவர்த்தி செய்ய, தேசிய நீர் வழங்கல் அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். 

அத்துடன், அரசாங்கத்தின் தேசிய நீர் வழங்கல் திட்டத்தில் பெருந்தோட்டங்களும் தோட்ட மக்களும் உள்ளீர்க்கப்படல் வேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய நீர் வழங்கல் அமைச்சினால், பதுளை மாவட்டத்தில் நீர் வழங்களும் திட்டமிடலுக்குமான மீளாய்வுக் கூட்டம், பதுளை மாவட்ட அரச செயலகக் கேட்போர் கூட்டத்தில், நேற்று (30) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பெருந்தோட்ட மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காமை பாரதூரமான விடயமாகும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, 'பெருந்தோட்டப் பகுதிகளில் நீர் வழங்கல் பிரச்சினைகளில் பல்வேறு இடையூறுகள் இருப்பதால், தோட்டப் பகுதிகளுக்கு நீர் வழங்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமலுள்ளது' என்றார்.

அதற்குப் பதிலளித்த அ.அரவிந்தகுமார் எம்.பி, தேசிய நீர்வழங்கல் வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டங்களையும் தோட்ட மக்களையும் இணைப்பதன் மூலமே, மேற்படிப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அதற்குத் தேவையான உதவிகள், ஏற்பாடுகளை தான் முன்னின்று செயற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X