2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கு 3 சதவீத நிதி வேண்டும்

Yuganthini   / 2017 மே 11 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

சனத்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்பவே, மாகாணக் கல்வி அமைச்சுக்கு கடந்த காலங்களில், நிதி ஒதுக்கப்பட்டது. சிங்களவர்களுக்கு  12 சதவீதம், தமிழர்களுக்கு 3 சதவீதம் மற்றும் முஸ்லிம்களுக்கு 1 சதவீதம் என்ற அடிப்படையிலேயே, அந்த நிதி ஒதுக்கீடு அமைந்திருந்தது. ஆனால், அது தற்போது நடைமுறையில் இல்லை. அதனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு, மத்திய மாகாண புதிய தமிழ்க் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்தார்.

மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சு மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது,

“நீண்டதோர் இடைவேளைக்கு பிறகு மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சு மீண்டும் வழங்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். இந்த அமைச்சு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டிருந்தால் இன்னும் பல அபிவிருத்திகளை மத்திய மாகாணத்தில் செய்திருக்க முடியும்.

“மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு என்பது ஒரு முக்கியமான அமைச்சாகும். அதுவும் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளை பொறுத்த வரையில் இந்த அமைச்சின் சேவைகள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே, தற்பொழுது அவ்வமைச்சு மீண்டும் வழங்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். ஆனால், இந்த அமைச்சை வைத்துக்கொண்டு, மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சுடனும் இணைந்து செய்பட முடியுமாக இருந்தால், அதுவே இந்த அமைச்சின் வெற்றியாக அமையும்.

“தற்பொழுது மத்திய அரசாங்கத்தில் இருந்து பல்வேறு அபிவிருத்தி பணிகள் பெருந்தோட்டப் பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த அபிவிருத்தி பணிகளை முறையாக பார்வையிட்டு அதன் குறைபாடுகளை உடனுக்குடன் மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சுக்கு அறிவித்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய முழு பொறுப்பும் மாகாண அமைச்சுக்கு இருக்கின்றது. அவை, மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் முறையாக செய்யவில்லை.

“இதன் காரணமாகவே, இன்னும் பல தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை திறக்க முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, இவற்றை விரைவாக திறந்து வைப்பதற்கு மாகாண அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க நான் தயாராக இருக்கின்றேன். என்னைப் பொறுத்தளவில் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதனை யார் செய்தாலும் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

“எமது மலையக பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதி கட்சி, தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து மலையகக் கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் எங்களோடு இணைந்து செயற்பட தயாராக இருந்தால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .