2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களுக்காகவும் அரசாங்கம் தலைசாய்க்க வேண்டும்: மனோ

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஷ்

நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திச் சங்க இணைத்தலைவராக யாரோ நியமனம் பெற்றுள்ளார்களாம் அவர்களுக்கு நியமனம் கிடைத்து விட்டதா ? எனத் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், 'கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஆகியவற்றில் அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளவர்கள் மலையக மக்கள். அதுவும் நுவரெலியா மற்றும் ஊவா மாகாண மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தினை கொண்டு வர அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் முஸ்லிம் மக்கள் ஆகியோரது  உரிமைகளுக்கு அரசாங்கம் எவ்வாறு தலை சாய்கின்றதோ அதேபோன்று மலையக மக்கள் பக்கமும் அவர்களின் உரிமைக்காக திரும்பி பார்க்க வேண்டும்.

அந்த அளவுக்கு  தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆதரவினை பெற்றுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கும் செயலாற்றுவதற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றது. ஆண்டாண்டு காலமாக மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கும் வீடு காணி, கல்வி போன்ற உரிமைகளுக்கும்  இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமைகளை பெற்றுக்கொடுக்க சர்வதேச ரீதியில்; எவ்வாறு முன்னெடுப்புகளை செய்கின்றார்களோ அதேபோன்று மலையக மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வதேச ரீதியில் கோரிக்கைகளை முன்வைத்து வென்றெடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.

தை பிறந்தாள் வழி பிறக்கும் என ஆண்டாண்டு காலமாக சொல்லி வந்தாலும் வழி பிறந்ததாக தெரியவில்லை. ஆனால் தை பிறப்பதற்கு முன்னால் 2015 ஆண்டு நல்லாட்சியின் ஊடாக மலையக மக்களுக்காக வழி பிறந்து விட்டது. 

இந்த வேளையில் முக்கியமான ஒன்றை கூற விரும்புகின்றேன். மலையகத்தில் உள்ள பிரதேச சபைகளின் தொகையினை விரிவுப்படுத்தி அதனூடாக படித்த இளைஞர்கள் சமூக உணர்வு கொண்டவர்கள் ஆட்சி ஆளாக்கூடிய விதத்தில் பிரதேச சபைகளின் நிதி ஒதுக்கீடு நேரடியாக மலையக தோட்டப்பகுதிக்கு சென்றடைய வாய்ப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து தமிழ் முற்போக்கு கூட்டணி சாதனைப்படைத்துள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .