2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘மீண்டும் முத்தரப்புப் பேச்சுவாரத்தை வேண்டும்’

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மீண்டும் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும், சம்பளம், தொழில்சார் உரிமைகளைத் தீர்க்க, 3ஆம் தரப்பான அரசாங்கம் செயற்பட முன்வர வேண்டும் என, மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள விடயத்தில் இருந்து அரசாங்கம் நழுவ முடியாத என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் கட்டம் கட்டமான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முன்னணியின் உறுப்பினர்களின் சேவையை பாராட்டி பதவி வழங்கும் நிகழ்வு, தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கான, அரசாங்கத்தின் அழுத்தம், மேலும்  அதிகரிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கம்பனிகள் நலுவல் போக்கையே கடைபிடிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வு விடயம் தொடர்பில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடியதாகவும் இதன்போது, “அரசாங்கம் சம்பள நிர்ணய சபையில் தீர்மானித்த 900+140 சம்பள உயர்வை ஏற்க முடியாது என்றும்  தங்கள் தரப்பில் முன்வைத்துள்ள 725 ரூபாய்க்கும் மேல் தமக்குச் செல்ல முடியாது என்றும் கம்பனிகள் தெரிவித்துள்ளன” என்றும் அமைச்சர் தெரிவித்ததாக இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதேநேரத்தில், சம்பள உயர்வுக்குச் சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கூட்டு ஒப்பந்தமும் அவசியமென, அமைச்சர் தெரிவித்ததாகவும் கூறினார்.

தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது தொழிற்சங்கத்தின் பொறுப்பு என்றாலும் அதில் அரசாங்கத்துக்கம் பங்கு உண்டு என்றும் இதை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக மக்கள்  முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக, சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் செய்தி போலியானவை என்றும் தங்களது கூட்டணி, தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .