2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

லொறியின் சாரதி மீது தாக்குதல்: இருவர் கைது

Kogilavani   / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொத்மலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை அடித்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படும்  இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகக் கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேற்படி இருவரையும் இன்று (4) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வீடியோ ஆதாரங்கள் மூலம் ஏனைய சந்தேக நபர்களையும் இனங்கண்டுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து கடந்த மாதம் 28ஆம் திகதி வீதியை கடக்கமுயன்ற பெண்ணொருவர் மீது, லொறியொன்று மோதியதில் அப்பெண் ஸ்தலத்திலேயே பலியானார்.

இந்த விபத்தில், வெதமுல்ல - இறம்பொடை ஆர்.பீ பிரிவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயான பெருமாள் கோகிலா (வயது 34) என்பவரே பலியானார்.

சம்பவத்தையடுத்து, லொறியை சுற்றிவளைத்த பிரதேசவாசிகள், லொறிமீது தாக்குதல் நடத்தியதுடன் சாரதியை லொறிக்குள்ளிலிருந்து வெளியே  இழுத்தெடுக்க முயற்சித்ததோடு, சிலர் கற்கள் மற்றும் தடிகளைப் பயன்படுத்தி லொறிமீது தாக்குதல் நடத்தி லொறியையும் சேதத்துக்குள்ளாக்கினர்.

சம்பவத்தைக் கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த கொத்மலை பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தாக்குதலில் காயமடைந்த லொறியின் சாரதியை கொத்மலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில், டிசெம்பர் 29ஆம் திகதி சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்திருந்தார்.

இந்நிலையிலே,லொறியின் சாரதியை தாக்கியோரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .