2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வரவு-செலவு திட்டத்தில் வரிசுமை விதிக்காததையிட்டு பிரபா எம்.பி மகிழ்ச்சி

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு -செலவு திட்டத்திற்கு எமது கட்சியான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தாலும் இன்னும் பல விசேட அம்சங்களை இந்த வரவு-செலவு திட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்த்திருந்தோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வரவு-செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வரவு-செலவுத்திட்டத்தில் மக்கள் மீது எவ்விதமான வரி சுமைகளையும் விதிக்காததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். அதே நேரம் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 1200 ரூபா சம்பளம் உயர்வு மகிழ்ச்சியினை தந்தாலும் அரசாங்க ஊழியர்களது எதிர்ப்பார்ப்பு இதைவிட அதிகமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வரவேற்கின்றேன்

கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்றவற்றுக்கு இவ்வரவு செலவு திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வைத்தியசாலைகள் அபிவிருத்தி சம்பந்தமாகவும் தெளிவான சிந்தனை வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதே போல் நவீன கருவிகளை வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகள் வரவேற்கக் கூடியதாக இருக்கின்றது. சிறுவர்களுக்கான போசாக்கு சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள் சம்பந்தமாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன் என்றார்.

வாக்களித்தவர்களா என்று தேடிப்பார்க்கவில்லை

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு நகர் வெளிநாடுகளுக்கு நிகரான முறையில் இன்று அழகு படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பொது மக்களின் வீடுகளை அப்புறப்படுத்தப்படும் பொழுது அவர்களுக்கு வழங்கப்படும் மாற்று வீடுகள் அவர்கள் மன நிறைவோடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அண்மையில் தெமட்டகொடவில் கையளிக்கப்பட்ட 500 தொடர்மாடி வீடுகள் மிகவும் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. பல வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் வீடுகள் கையளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது தெரிந்து கொண்டேன்.

இந்த வீடுகளை கையளிக்கும் போது பயனாளிகள் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களா என்று தேடிப்பார்க்கவில்லை. இன்று கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் குறிப்பாக அடிமட்ட தோட்டப் புறங்களில் வாழும் மக்கள் அரசாங்கத்தின் நற் செயல் திட்டங்களுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்க வேண்டும். இன்று கொழும்பு மாவட்ட மாநகர முதல்வர் கூட அரசாங்கத்தின் இவ்வேலைத்திட்டங்களுடன் இணைந்திருப்பதை பார்க்கும் பொழுது அவரைத் தெரிவு செய்த மக்களும் அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மேலும் பல அபிவிருத்திகளை கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் ஏழை எளிய மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர்

பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த எமது தோட்டத் தொழிலாளர்களின் நலன் சம்பந்தமாகவும் இந்த வரவு செலவு திட்டத்தில் நேரடியாக குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கக் கூடிய விடயமாகும். இவர்களது அடிப்படை வசதிகள் சம்பந்தமாக தெளிவான முறையில் குறிப்பிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. எமது தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மத்திய மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்திற்கு அணிதிரண்டு வாக்களித்தார்கள். அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இவ் வரவு-செலவு திட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலமாக ஐம்பதாயிரம் வீட்டு தொகுதிகள் இவர்களுக்காக நிர்மாணிக்க முன் மொழியப்பட்டுள்ளது. இவ்விடயத்தை எதிர் கட்சிகள் புரிந்து கொள்ளாமல் மக்களை பிழையாக வழிநடத்துகின்றனர். ஐம்பதாயிரம் வீட்டுத்தொகுதிகளை இவர்கள் தொடர்மாடி குடியிருப்புகள் என்று மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

வரவு-செலவு திட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பதாயிரம் தொடர்மாடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதாக சொல்லவில்லை. மாறாக ஐம்பதாயிரம் வீட்டுத் தொகுதிகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுத் தொகுதி என்பது  Scheme முறையிலான திட்டமேயாகும். இது சம்பந்தமாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரிடம் வினவிய போது கொழும்பு போன்ற பிரதேசங்களில் இட வசதி இன்மையினாலேயே நாங்கள் தொடர்மாடி வீடுகளை கட்டுகின்றோம். ஆனால் நுவரெலியா போன்ற தோட்டப் பகுதிகளில் மேதிகமாக இடம் இருக்கும் பொழுது அங்கு தொடர்மாடி வீடுகளை கட்ட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத எதிர்கட்சி தலைமைகள்

அரசாங்கம் தொடர்மாடி வீடுகளை அமைக்குமேயாயின் நான் அதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத எதிர்கட்சி தலைமைகள்  மக்களை பிழையாக வழி நடத்த முற்படுகின்றார்கள். மத்திய மாகாணசபை தேர்தலின் போது ஜனாதிபதி வீடுகளை கட்டுவதற்கு 7பேர்ச்சஸ் காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளை வழகாமல் இருப்பதற்காகத்தான் அரசாங்கம் தொடர்மாடி வீடுகளை தோட்டப்புறங்களில் நிர்மாணிக்க உள்ளதாக பொறுப்பற்ற முறையில் பொய் பேசுகிறார்கள். இவர்களது நோக்கம் தமிழ் மக்களுக்களுக்கான அரசியல் தீர்வையோ அடிப்படை வசதிகளையோ பெற்றுக் கொடுப்பது அல்ல. மாறாக இவ் அரசாங்கத்தை மாற்றுவதாகத்தான் உள்ளது.

அரசாங்கத்தை ஒரு போதும் மாற்ற முடியாது

சிங்கள மக்களின் பேராதரவு கொண்ட இவ் அரசாங்கத்தை ஒரு போதும் இவர்களால் மாற்ற முடியாது. ஆகவே இவ் அரசாங்கத்தின் மூலமாகவே எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இவர்கள் முயற்சிக்க வேண்டும்.  அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்திலோ அல்லது நடவடிக்கைகளிலோ எனது தமிழ் மக்களுக்கு அநீதிகள் ஏற்படுமாயின் அரசாங்டகத்தை தட்டிக் கேட்பதற்கு நான் தயங்குவதில்லை. அதே போல் அரசாங்கத்தின் நல்ல செயல் திட்டங்களுக்கு எதிர் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும். அதுவே நாட்டை நேசிப்பவர்களின் கடமையாகும்.

பெருந்தோட்டத்துறை வீடுகளை நிர்மாணிப்பதற்கு காலவரையரை தீர்மானிக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத்துறைக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படும் பொழுது களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

சிறந்த கல்விமான்களை உருவாக்க முடியும்

கல்வித் துறைக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளித்தாலும் அதில் 60வீதமான தொகை ஆசிரியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகின்றது. மிகுதி தொகையை வைத்து எமது கல்வித்துறையை வளர்ப்பது சிரமமான காரியமாகும். தேசிய வருமானத்தில் 7 சதவீதத்திற்கும் அதிகமான தொகைளை கல்வித் துறைக்கு ஒதுக்குவதன் மூலமாகவே எமது நாட்டில் சிறந்த கல்விமான்களை உருவாக்க முடியும்.

பெருந்தோட்டத் துறைகளில் இருக்கும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களில் பலர் வறுமை காரணமாக பாடசாலைகளுக்கு முறையாக செல்வதில்லை. இவர்களுக்கான பாடசாலை சீருடை அப்பியாசப் புத்தகங்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை எமது அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்

இந்நாட்டின் அந்நிய செலாவணியை கடந்த 150 வருடங்களாக பெற்றுக் கொடுக்கும் மலையக இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன்களில் அரசாங்கம் மேலும் அக்கறை காட்ட வேண்டும். யுத்தத்திற்கு முன்பும் பின்;பும் வடகிழக்கு மக்களின் அபிவிருத்தியையே எமது அரசாங்கமும் சரி சர்வதேசமும் சரி பேசி வருகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு அபிவிருத்தி அவசியமானது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அந்த சகோதரர்கள் யுத்த கால பகுதியில் அதிகளவு பபாதிக்கப்பட்டிருப்தை நான் அறிவேன். ஆகவே அவர்களுக்கான அபிவிருத்திக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

ஆனால் யுத்தமின்றி மோசமான நிலைக்குள்ளாகி இருக்கும் எமது மலையக இந்திய வசம்சாவளி மக்களைப் பற்றிய சிந்தனை எமது அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் பெரியளவில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். இதனை உணர்ந்து எமது இந்த அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .