2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மாகாண பாடசாலைகளை தரமுயர்த்தி ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவவேண்டும்: ராம்

Kanagaraj   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப மாகாண மற்றும் அரச பாடசாலைகளை தரமுயர்த்தி ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்துவதற்கு மாகாண முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநேகமான மாகாண பாடசாலைகளில் போதிய பௌதீக வளங்கள் இல்லாதுள்ளன. இதனால் இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்வி என்பது சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமான ஒன்றாகும். அத்தோடு நாட்டின் முன்னேற்றத்திலும் அது அதிக செல்வாக்கை செலுத்தியுள்ளது. எனவே அந்த நடவடிக்கையினை சகலரும் சமமான முறை மேற்கொள்வதற்கான சூழல் காணப்படுதல் வேண்டும்.

இன்று தனியார் பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் பல்வேறு வசதி வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால் அவ்வாறான வசதி வாய்ப்புக்கள் அரச பாடசாலைகளில் அதுவும் மாகாண பாடசாலைகளில் இல்லையென்பதை யாவரும் அறிவர், எனவே அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

ஏழை மாணவர்களால் தனியார் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாது. ஆனால் அப்பாடசாலைகளில் பயிலுகின்ற மாணவர்களைப் போன்று நன்றாக படிக்க முடியும், எனவே அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.

சர்வதேச நாடுகளுடன் போட்டி போடும் வகையில் எமது நாட்டின் கல்வித்தரம் இருக்கவேண்டும். குறிப்பாக அதனை அடைவதற்கான வழிவகைகள் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் இருக்கவேண்டும். அப்போதே உண்மையான பிரதிபலனை அடையமுடியும்.

நன்றாக படிக்கக்கூடிய ஏழை மாணவர்களும் தரமான உயர் பாடசாலைகளுக்கு செல்வதற்கான ஒரு நிலைமை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் முறையால் காணப்பட்டது. ஆனால் அந்த முறைமையினை விரைவில் தீர்க்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே அதற்கான மாற்று வழி என்னவென்பதை குறிப்பிடவில்லை.

எனவே, இவ்வாறான திட்டங்களால் ஏழை மாணவர்களே பாதிக்கப்படுகிறார்கள். ஆகையால் ஏழை மாணவர்களும் கல்வியில் சிறப்பாக முன்னோக்கிச் செல்வதற்கு  தடையாக இருக்கம் காரணிகளை நீக்கி அவர்களுக்கும் நல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X