2025 ஜூலை 09, புதன்கிழமை

அக்கரை பகுதியை சுற்றுலாத்தளமாக மாற்ற நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட வளலாய், அக்கரை பகுதியை 20 இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் தளமாக மாற்றவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை வியாழக்கிழமை (28) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட மேற்படி பிரதேசம் கடந்த மார்ச் மாதம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அப்பிரதேசத்தில் 50 குடும்பங்கள் வரையில் மீளக் குடியேறியுள்ளனர். இம்மக்கள் அங்கு பிரதானமாக மீன்பிடித் தொழிலை, மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் வீச்சு வலை மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி பிரதேச கடற்கரை பார்ப்பவர்களைக் கவரும் விதத்தில் இருப்பதுடன், விடுவிக்கப்பட்ட பின்னர் அதிகளவானவர்கள் அங்கு வந்து செல்வதையும் கருத்திற்கொண்டு அந்த கடற்கரைகளை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கடற்கரை அண்டிய பகுதிகளில் சவுக்குமரம் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பிரதேச சபையின் 20 இலட்சம் ரூபாய் நிதி செலவு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வாசிகளுக்கு வேலைவாய்பையும் பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். மேலும், பிரதேச சபைக்கு வருமானமும் கிடைக்கப்பெறும்.

இது தொடர்பில் ஆராயும் பொருட்டு, வியாழக்கிழமை (28) அப்பகுதிக்கு விஜயம் செய்து, ஆராய்ந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இவ்வருட இறுதிக்குள் சுற்றுலாத்தளமாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .