2025 ஜூலை 09, புதன்கிழமை

கொக்கிளாய் முகத்துவாரத்தில் கனிய மணல் அகழ்வு தடுத்து நிறுத்தம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.றொசாந்த்

முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள கொக்கிளாய், ஆற்றுத்தொடுவாயில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வந்த இல்மனைட் கலந்த கனிய மணலை அள்ளும் நடவடிக்கை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் தலையீட்டால் வியாழக்கிழமை (28) நிறுத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள இல்மனைட் தொழிற்சாலைக்காக கொக்கிளாய் ஆற்றுத்தொடுவாயில் கனிய மணல் அள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த இடத்தில் மணல் அள்ளுவதற்கான அனுமதி கடந்த 2013 டிசம்பர் மாதம் முடிவுற்ற நிலையிலும், அந்நிறுவனம் மீண்டும் கடந்த புதன்கிழமை (27) முதல் மணல் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.

இது தொடர்பில் அறிந்த விவசாய அமைச்சர், அங்கு நேரில் சென்று கரைத்துறைப் பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இது தொடர்பில் அமைச்சர் கருத்து கூறுகையில்,

முகத்துவாரம் பகுதியில் மணல் அகழ்வதற்கு பெரிதாகப் பிரச்சினையில்லை. முகத்துவாரம் ஊடாக நீர் மாறும்போது அது தானாக நிரவப்படும். ஆனால் அதற்கு தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம் அனுமதிப்பத்திரம் வழங்கியிருக்க வேண்டும்.

நாம் அந்தப் பகுதிக்குச் வியாழக்கிழமை (28) சென்றிருந்த போது கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழப்பட்டு உழவு இயந்திரங்கள் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட புல்மோட்டை பகுதிக்கு எடுத்துச் செல்லப்ப்பட்டது.

அங்கிருந்தவர்களுடன் நாம் பேசியபோது குறித்த பகுதியில் கடந்த புதன்கிழமை சுமார் 50ற்கும் மேற்பட்ட உழவு இயந்திரச் சுமையளவு மணல் அகழப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேபோன்று வியாழக்கிழமை (28) மணல் அகழப்பட்டுக் கொண்டிருந்தது. எம்மைக் கண்டவுடன் கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரம் ஆகியன அந்தப் பகுதியிலிருந்து சென்றுவிட்டன.

பின்னர் இதுவிடயமாக கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்து பேசியிருந்தோம். அதன்போது தமக்கும் தெரியாமலேயே குறித்த மணல் அகழ்வு இடம்பெறுவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள், ஒரு அனுமதிப் பத்திரத்தை காண்பித்துள்ளனர். அந்த அனுமதிப்பத்திரம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது.

அந்த அனுமதிப்பத்திரத்தை வைத்தே இதுவரையில் மணல் அகழ்ந்துள்ளனர். இது சட்டத்தை மீறும் ஒரு செயலாகும்.

இல்மனைட் தொழிற்சாலை மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமானது. ஆனாலும் மத்திய அரசாங்கமும் தொழிற்சாலைக்குரிய கனிய மணலை அகழ்வதற்கு தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும்.

சுரங்கங்கள் பணியகம் மணல் அகழக்கூடிய இடத்தை, அடையாளப்படுத்திக் கொடுத்திருக்கவேண்டும். மேலும் குறித்த மணல் அகழப்படும் இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் வடமாகாணத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது.

எனவே எங்கள் மாகாணத்திற்குள் இருந்து கனிய வளத்தை எடுக்கும்போது அது தொடர்பில் எமது மாகாணசபைக்கு தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

கேட்பாரற்ற முறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரனைட்கல் மற்றும் கனிய மணல் ஆகியவற்றை மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக, தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகளுக்காகவும் உரிய அனுமதிப் பத்திரங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமல் அபகரித்து வருகின்றமையை நாங்கள் பார்க்கின்றோம்.

பிரதேச செயலாளருடன் பேசிய பின்னர் நாம் குறித்த கனியமணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு பிரதேச செயலாளரைக் கோரியிருந்தோம்.

அதற்கமைவாக பிரதேச செயலாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதுடன் அந்தப் பகுதிக்கு பொறுப்பான கிராமஅலுவலர் மற்றும் பொலிஸார் இணைந்து கொக்கிளாய் பகுதிக்கு மீண்டும் சென்றிருந்தோம்.

அதன்போது, அங்கே எவ்விதமான வாகனங்களும் இல்லை. வாகனங்கள் மற்றும் ஆட்கள் அப்பகுதியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குள் சென்றுவிட்டனர்.

எனினும் தொடர்ச்சியாக அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழப்பட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிஸாரை நாம் கோரியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .