.jpg)
-பொ.சோபிகா
இலங்கையர்கள் தங்களுடைய இலக்கை அடைவதில் முனைப்புடன் செயற்படும் உழைப்பாளிகள் என்று கொரிய நாட்டு தூதுவர் வோன் ஸாம் ஷங் (Won-sam CHANG) தெரிவித்ததாக யாழ் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்தார்.
கொரிய நாட்டு தூதுவருக்கும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பபட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கேட்பதற்கும் பார்வையிடுவதற்குமாக தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தூதுவர் என்னிடம் கேட்டபோது நான் அதற்கு விளக்கமளித்திருந்தேன்.
நாம் எதிர்பாத்திருக்கின்ற சிறந்த அபிவிருத்தி போக்குகளை எட்டக்கூடிய காலம் விரைவில் வரும் என்று தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்துடன் இதனை தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான இடங்களை அவர் பார்வையிடுவதற்கு செல்லவுள்ளதாக எனக்கு கூறினார்.
தனது யாழ்ப்பாணத்திற்கான முதலாவது வருகை இது என்றும் தொடர்சியாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதாகவும் கூறினார்.
அத்துடன், கைத்தொழில் தொடர்பான ஆலோசனைகள், கொள்கை ரீதியான ஆலோசனைகள் என்பவற்றை முன்னரை போல தற்போதும் பெற்றுத்தருவதாகவும், தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகளில் அந்நாடு பங்களிப்புக்களை வழங்கும் என தூதுவர் தனக்கு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.