2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் சிறந்த சிகிச்சையை வழங்க முடியும்'

George   / 2015 மார்ச் 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்தால் வடமாகாண மக்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும் என நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் சஞ்ஜீவ கருசிங்கே தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலத்துக்கு பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவு யாழ். போதனா வைத்திய சாலையில் இயங்கி வருகின்றமை வடமாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 

இதுவரை காலமும் நரம்பியல் சம்பந்தமான சிறிய அளவிலான சத்திரசிகிச்சையும் விபத்தினால் ஏற்பட்ட நரம்பியல் தொடர்பான அவசர சிகிச்சையுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

முதன்முறையாக பெண் ஒருவரின் மூளையில் வளர்ந்த கட்டியை அகற்றும் பெரியளவிலான  சத்திர சிகிச்சையை எனது தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர், கடந்த புதன்கிழமை(18) மேற்கொண்டோம். தொடர்ச்சியாக 6 மணிநேரம் மேற்கொண்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது. தற்போது நோயாளி விடுதிக்கு மாற்றப்பட்டு சுகமடைந்து வருகின்றார்.

இதுவரை காலமும் இவ்வாறான பெரியளவிலான நரம்பியல் சத்திர சிகிச்சைக்கு நோயாளிகள் கொழும்புக்கே கொண்டு செல்லப்பட்டனர். அதனால் நோயாளிக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைப்பதில் தாமதங்கள், நோயாளிக்கான செலவுகள் மற்றும் மொழிப் பிரச்சினை என்பன காணப்பட்டன.

இவ்வாறான சத்திர சிகிச்சை ஒன்றை தனியார் வைத்திய சாலையில் மேற்கொள்வதாயின் நோயாளிக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும்.   வடமாகாணத்தில் தற்போது எந்த தனியார் வைத்தியசாலையிலும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகள் இல்லை. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் இந்த வசதிகள் உண்டு.

வடமாகாணத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் இவ்வாறான பெரிய அளவிலான நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்ள தொடங்கியுள்ளதால் நோயாளிகளுக்கான சிரமங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் வீதி விபத்துக்களினால் அதிகமானேர்   நரம்பியல் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கும்   மூளைப்புற்று நோயளிகளுக்கும்;   நரம்பியல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவுக்கு என தனியான சத்திரசிகிச்சைக்கூட வசதி, சத்திரசிகிச்சைக்கான சில உபகரணங்கள் வழங்கப்பட்டன

தற்போது இலங்கை அரசாங்கத்தினால் 250 மில்லியன் ரூபாய் செலவில் சர்வதேச தரத்திலான சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சத்திர சிகிச்சை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான மேசை, நுணுக்கு காட்டி மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவுக்கான விடுதி வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அவசர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள் தற்போது இல்லாமையால் சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். 

நரம்பியல் சத்திர சிகிச்சைக்கு என விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட தாதியர்கள் வைத்தியசாலையில் இல்லை. இவையும் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் நாம் வடமாகாண மக்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X