2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடி அமைச்சால் கதிரைகள் வழங்கிவைப்பு

George   / 2015 மார்ச் 31 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வடமாகாணத்திலுள்ள மீன்பிடி, கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு அவற்றின் பௌதீக வளங்களை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 1,000 கதிரைகள் வழங்கும் நிகழ்வு, மீன்பிடி அமைச்சின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) ஆரம்பிக்கப்பட்டது. 

வடமாகாண மீன்பிடி, வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் தலா 200 கதிரைகள் என்ற ரீதியில் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

மயிலிட்டித்துறை கடற்றொழியலாளர் கூட்டுறவுச் சங்கம், புங்குடுதீவு நசரேத் கிராமிய கடற்றொழிலாளர் சங்கம், பொலிகண்டி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், அரியாலை மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றுக்கு தலா 25 கதிரைகளும், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்துக்கு 50 கதிரைகளும் இன்றைய நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டன. 

யாழ்ப்பாணத்துக்கான மிகுதி 50 கதிரைகளும், மற்றைய மாவட்டங்களுக்குமான கதிரைகள் எதிர்வரும் மாதத்தில் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

இதுகுறித்து டெனீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண மீன்பிடி அமைச்சின் கீழ் நன்னீர் மீன்பிடி காணப்படுகின்றது. நன்னீர் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கும், அதிகப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். யாழ். மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி முறை இல்லை என்றாலும் இனிவரும் நாட்;களில் யாழ்.மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடி முறை ஆரம்பிக்கப்படவேண்டும். 

யாழ். மாவட்ட மீனவர்கள் தற்போது பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய இழுவைப் படகின் வருகை, தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி, யாழ். மாவட்ட மீனவர்கள் சிலரின் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை ஆகியவற்றால் பல மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால் மீனவ சமூகம் மீனுக்கு கையேந்தும் நிலைதான் ஏற்படும். இது தொடர்பாக விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது எமது கடமை. 

மத்திய அரசின் கீழ் இந்த மீன்பிடி இருந்தாலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் உரிமை எமக்கு உண்டு. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் தீர்வு வரும் என எதிர்பார்க்கின்றோம். 

எமக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் எவரும் வந்து மீன்பிடியில் ஈடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதில் வேதனையான விடயம் கடற்றொழில் அதிகாரிகள் இந்த முறையற்ற மீன்பிடிக்கு ஒத்துழைப்பது கண்டிக்கத்தக்க விடயம். எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு கடல்வளத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். எம்முடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார். 

இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சு.சுகிர்தன் ஆகியோர்  கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .