2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சி.விக்கும் ரணிலுக்கும் இடையில் என்ன பிரச்சினை: ஜேர்மன் தூதுவர் கேள்வி

George   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ். வருகை, வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்லதொரு இணக்கத்தை கொண்டு வருவதாக அமைந்திருக்கும். ஆனால் பிரதமர் - வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்;கிடையேயான நெருக்கம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்று ஜேர்மன் குடியரசின் தூதுவர் ஜோர்யின் மோர்ஹாட் தன்னிடம் வினாவியதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் தூதுவர், யாழ். ஆயரை ஆயர் இல்லத்தில் புதன்கிழமை(01) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் குறித்து யாழ். ஆயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதா? என்று அவர் என்னிடம் வினாவினார், அதற்கு நான் ஆம் என்று கூற, பிரதமர் - முதலமைச்சர் இடையில் நெருக்கம் இல்லாமைக்கான காரணம் என்ன என என்னிடம் வினாவினார். 

இருவருக்கும் இடையில் விரிசல் காணப்படுவது உண்மை. அது கொள்கை ரீதியான முரண்பாடாக இருக்கலாம் என்று கூறினேன். மக்கள் தற்போது எதை விரும்புகின்றார்கள்?, எதை எதிர்பார்க்கின்றார்கள் என்று அவர் என்னிடம் வினாவினார்.
ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் பங்காற்றியுள்ளனர். மக்கள் தொடர்ந்தும் மாற்றத்தில் இணைந்து கொள்ள விரும்புகின்றார்கள். பிரதமர் தனது விஜயத்தில் சில நல்ல காரியங்களை செய்துள்ளார். 

குறிப்பாக மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட 1,000 ஏக்கர் காணிகளை மீளக் கையளிப்பதாக உறுதியளித்து, அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. மீளக்கையளிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர உதவுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். வளலாய் பகுதியில் குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் தமக்கு வழிபாட்டுத்தலம் தேவை என்று கோரினர் என்றும் அவருக்கு பதிலளித்தேன். 

மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வழிபாடுகளை மேற்கொள்ளத் தேவையான வழிபாட்டுத் தலங்களை அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தான் கூறியதாக தூதுவர் தெரிவித்தார். 

தற்போதய இளைஞர்கள் தங்கள் வாழ்வை இங்கு தொடர விரும்புகிறார்களா? அல்லது வெளிநாடு செல்ல விரும்புகிறார்களா? என்று என்னிடம் தூதுவர் கேட்டார். பெரும்பாலானோர் வெளிநாடு செல்லவே விரும்புகின்றனர். ஏன் என்றால் இங்கு வேலைவாய்ப்புக்களும் அதற்கான சந்தர்ப்பங்களும் குறைவாக இருப்பதால் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர் என்று தூதுவருக்குக் கூறினேன். ஜேர்மன் அரசும் இங்கு இளைஞர்களுக்காக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக தூதுவர் தெரிவித்தாக ஆயர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .