2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விசேட அதிரடி படையினர்

George   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸார்-விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். 

யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில், யாழ். பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் போதே வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழில் போதைபொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருட்கள், போதையூட்டப்பட்ட பாக்கு என்பன விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சமூக பிறழ்வுகள் இடம்பெறுகின்றன.

விற்பனை செய்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களில் விடுதலையாவதால், அவர்கள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்கள் பயப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யும் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக பொலிஸார் பாடசாலை ஆரம்பிக்கும் போதும், முடிவடையும் போதும் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், போதைபொருள் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினைரை பயன்படுத்த பொலிஸ்மா அதிபர் அனுமதியளித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம். தகவல் தருவோர் பற்றிய ரகசியம் நூறு வீதம் பாதுகாக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .