2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

"தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் பெறவேண்டும்"

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தொழில்நுட்பத்தின் அபரவிதமான வளர்ச்சி, வாழ்க்கை முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய மாணவர்கள் தொழில்நுட்ப உலகுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் தொழில்நுட்ப கல்வியில் பூரண அறிவை பெற வேண்டும். தொழில்நுட்பத்துறை சார்ந்து பெற்றுக்கொள்கின்ற அறிவே ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது என இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் பாலரட்ணம் நந்தகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் தம்பர் மண்டபத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்றபோது, அந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே உதவிப் பொது முகாமையாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
 
பாடசாலைக் காலத்தில் பெற்றுக்கொள்ளும் ஏட்டுக்கல்வி மட்டும் வாழ்க்கையில் போதாது. தனியே பெறப்படுகின்ற ஏட்டுக்கல்வியின் ஊடாக வாழ்வில் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் கல்வியோடு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளாகிய விளையாட்டு, கவின்கலை போன்ற துறைகளிலும் பங்குகொண்டு பாடசாலைக் காலத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மாணவர்களிடத்தில் தலைமைத்துவம், விட்டுக்கொடுக்கும் பண்பு, பிறருடன் இணைந்து கருமமாற்றும் இயல்பு, குழு ஒருமைப்பாடு என்பன வளர்தெடுக்கப்படும். இளம் தலைமுறையினராகிய மாணவர்கள் சமய விழுமியப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை வாழ்வியலில் கடைப்பிடித்து வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்.

தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி வாழ்க்கை முறைமையிலுள்ள அனைத்து விடயங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சமூகப் பொருளாதார முறையில் மாற்றம், போன்ற மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் அடிப்படையில் மாறிவரும் பூகோள உலகுக்கு ஏற்ப   சவால்களை எதிர்கொள்ளத்தக்கவர்களாக மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .