2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'நிலத்தடி நீர் மாசு தொடர்பில் சட்டரீதியான சபையை உருவாக்க வேண்டும்'

George   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக அரசின் கீழ் சட்டரீதியான சபையை அரசு உருவாக்க வேண்டும் என நிப்போ அமைப்பின் தேசிய அமைப்பாளர் திலக் பட்டியகும்புற, சனிக்கிழமை (04) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிப்போ தேசிய புலமைசாலிகள், தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 17 மாவட்டங்களில் பொது மக்களுக்கான சேவையை வழங்கிவருகிறது.

இந்த குழுவை பொதுப்பிரச்சினைகள், பொது மக்கள் சார்பான பிரச்சினைகளை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் இவ்வமைப்பை ஆரம்பித்துள்ளோம். இன்று 18 ஆவது மாவட்டமாக யாழ். மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளோம்.

எமது அமைப்பு குடிநீர் தொடர்பாக மிகவும் அக்கறை கொண்ட அமைப்பாகும். இலங்கையில் அதிகமான மக்கள் பயன்படுத்த கூடாத அளவு உள்ள நீரையே பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்கள் அதிகரித்து செல்கிறது.

சுன்னாகம் பிரதேச மக்களிடமிருந்து எமக்கு அழைப்பு வந்ததையடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி சுன்னாக மக்களுடன் கலந்துரையாடி ஆய்வுகளை மேற்கொண்டோம்.

தற்போது அடிப்படை அறிக்கை தயாரித்துள்ளோம். முழுமையான ஆய்வு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம்.
இப்பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக இருந்தும் இது தொடர்பான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தரப்பில் எவரும் இதுவரை இல்லை என்பதை அறிந்த கொண்டோம். அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

வட மாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை, எழுத்து மூலமாக வெளியிடப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் நிலத்தடி நீரில் பாதகமான நச்சு பதார்த்தங்கள் இல்லை என்றும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். 

இவர்கள் எவ்வாறு இம் முடிவைப் பெற்றுக் கொண்டார்கள், எந்த அதிகாரிகள் அவ்வாய்வில் செயற்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் அவர்களிடம் விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும் விரும்புகின்றோம்.

நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் கைதரோ காபன் கலந்துள்ளமை அறியக்கூடியதாக இருந்தது. இது நீரில் இருக்கக்கூடிய செறிவை விட அதிகமாக உள்ளது. 

இது உலக சுகாதார அமைப்பினதும் இலங்கை தரப்படுத்தல் அமைப்பினதும் அளவை விட அதிகமானதாகும். மேலும் பல நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்ட போது தொழில்நுட்ப ரீதியான முடிவுகளைப் பெற்று தீர்வுகளைக் கண்டுள்ளனர். அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். 

இங்குள்ள எமது குழு இப்பிரச்சினை தொடர்பாக போராடியவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வோம். 
மத்திய அரசாங்கம் விரைவாக தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .