2025 ஜூலை 09, புதன்கிழமை

மீனவரை மோதிய கடற்படையினர் இருவர் இடமாற்றம்

Menaka Mookandi   / 2015 மே 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவரை மோதி, அந்த மீனவரை உயிரிழக்கச் செய்தனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 8 கடற்படையினரில் இருவர் முகாம் மாறிச் செல்வதாக காரைநகர் எலாரா கடற்படை முகாம் பொறுப்பதிகாரி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு புதன்கிழமை (06) கொண்டு வந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், வழக்குத் தவணைகளின் போது மிகுதி அறுவருடன் இந்த இருவரும் சமூகமளிக்க வேண்டும் என்று கூறினார். மேற்படி வழக்கு புதன்கிழமை (06) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் அனுமதி வழங்கினார்.

பிளாஸ்ரிக் படகில் எழுவைதீவு கடந்த டிசம்பர் 18ஆம் திகதி இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது, கடற்படை டோறா மோதியதில் மீனவரின் படகு சேதமடைந்ததுடன், படுகாயமடைந்த எழுவைதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரனி யேசுதாஸ் (வயது 60) என்ற மீனவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பில் மீனவரின் உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, அத்தினத்தில் எழுவைதீவு கடற்பரப்பில் இருந்த காரைநகர் எலாரா கடற்படை முகாமைச் சேர்ந்த 8 கடற்படையினரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது. அந்த எட்டு கடற்படையினரில் 2 கடற்படையினரே கற்பிட்டி, முல்லிக்காடு ஆகிய கடற்படை முகாம்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றதாக முகாம் பொறுப்பதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .