2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சந்தேகநபரின் பிள்ளைகள் தொடர்பில் விசாரணை

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 1ஆவது சந்தேகநபரின் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு, சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று (05) உத்தரவிட்டார்.

மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வழக்கு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் புதன்கிழமை (05), விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அதன்போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள 1ஆவது சந்தேகநபரான பூபாலசிங்கம் இந்திரகுமார், 'கடந்த 2 வருடங்களாக குறித்த வழக்கு தொடர்பில் நான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால், எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகின்றது. எனது பிள்ளைகளும் கச்சான் விற்று வருகின்றனர். இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது'  எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாது இருப்பார்களானால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதமளவில், யாழ்.நகர் பகுதியில் சிறார்கள் மூவர் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களிடம் அது தொடர்பில் வினவிய போது, "எமது அப்பா, புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளதனால் எமது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் உள்ளது.

அதனால் நாம் காலையில் பாடசாலை சென்ற பின்னர், மாலை வேளைகளில் கச்சான் விற்று வருமானம் ஈட்டுகின்றோம். காலையில் அம்மா கச்சான் வறுத்து சிறு சிறு சரையாக கட்டி வைத்து இருப்பார். மாலை வேளைகளில் அவற்றை நாம் வீதிகளில் கொண்டு சென்று விற்று வருமானத்தை ஈட்டி வருகிறோம்" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .