2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘பகிடிவதையில் ஈடுபட்டால் உடல் பாகங்கள் துண்டிக்கப்படும்’

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவினால் உரிமை கோரப்பட்டே இவ்வெச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அத்துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன?

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆவாக் குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்க புறம்பாக கூறும் ஊடகங்களால் ஆவா குழு சமூக சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருகின்றது. எமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூக சீர்கேடுகளையும் அழிக்கும் அமைப்பாகவே நாம் இதை கட்டமைத்துள்ளோம்.

எமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்களே. ஆகவே பல்கலைக்கழக பகிடிவதையினை தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் குழு  உருவாக்கப்பட்டுள்ளது. மறைமுகமாகவோ நேரடியாகவோ பல தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருப்பது நீங்கள் அறிந்ததே. அது மட்டும் இன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் மீதான துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய போது நாம் மேற்கொண்ட நடவடிக்கையும் நீங்கள் அறிந்ததே.

ஆகவே இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடல் பாகங்கள் ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படும். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதையினை எமக்கு அறியத்தரலாம். அது பல விசாரணைகளின் பின்பு உண்மைத்தன்மை அறியப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X