2024 மே 08, புதன்கிழமை

பிரதேச செயலக கண்காணிப்பின் கீழ் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Freelancer   / 2022 ஜூன் 21 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. 

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அந்தந்த பிரதேச செயலகங்களின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எனவே குறித்த எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் வருகை தொடர்பான விடயங்கள் முகாமையாளரால் முன்கூட்டியதாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். 

சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவர். 

எரிபொருள் வருகை மற்றும் விநியோகம் முதலிய தரவுகள் உத்தியோகத்தர்களால் பார்வையிடப்பட்டு அறிக்கையிடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த விடயங்கள் அங்கு கடமையில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்படும்.

பிரதேச செயலர்கள் தற்போதைய விவசாய அறுவடை காலம், மீன்பிடி நடவடிக்கைகள், பொதுமக்களின் அன்றாட தேவைகள் மற்றும் உத்தியோகத்தர்களின் தேவைகள் கவனத்திற் கொள்ளப்பட்டு அத்தியவசிய தேவைகளுக்கு முன்னுரிமையளித்து எரிபொருள் வழங்கும் விசேட பங்கீட்டு அட்டையினை விநியோகிப்பர்.

மேலும் எரிபொருள் விநியோகத்திற்கென விசேட பங்கீட்டு அட்டை அந்தந்த பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும். வாகன இயங்குநிலை தொடர்பான ஆவனங்கள் பார்வையிடப்பட்டு குடும்பமொன்றிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் எதாவது வேறு வாகனம் என்ற அடிப்படையில் இரு வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் அந்தந்த திணைக்கள தலைவர்கள் ஊடாக குறித்த பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த விசேட பங்கீட்டு அட்டைகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிற்கான தனித்துவ நிறங்களில் வழங்கப்படவுள்ளதுடன் இதனை பயன்படுத்தி வசிப்பிட பதிவுள்ள இடத்திலேயே எரிபொருளை பெறமுடியும். இவ் அட்டை நடைமுறை ஊடாக சமையல் எரிவாயு நடைமுறையும் பின்பற்றப்படும்.

மேலும் இரவு வேலைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படுகின்றமையை முகாமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு இரவு 8.00மணியுடன் விநியோகத்தினை இடைநிறுத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானதும் காலத்தின் தேவையானதுமென்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் இந் நடைமுறைகள் நேர்த்தியானதாக இருந்தால் முரண்பாடுகள் ஏற்படாது. 

எனவே பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை உடனடியாக எடுத்து  அத்தியவசிய தேவைகளுக்கு மட்டும் எரிபொருளை விநியோகிக்குமாறு பிரதேச செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாகவும் பிரதேச செயலாளாகள், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் இணையவழியூடாகவும் கலந்து கொண்டிருந்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X