2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகை தரும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இதன்போது பட்டதாரிகளுக்குத் தீர்வை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்திருக்கும் மாவை சேனாதிராசா இப் பேச்சுவார்த்தையினூடாக எடுக்கப்படுகின்ற முடிவு பட்டதாரிகளுக்கு நல்லதோர் தீர்வான அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பட்டதாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி, யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கடந்த 27ஆம் திகதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஐந்தாம் நாளான, நேற்று வெள்ளிக்கிழமை (03) போராட்டம் நடைபெறும் இடத்துக்கு மாவை சேனாதிராசா நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது மாணவர்கள் மத்தியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"கடந்த ஐந்து நாட்களாக பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நியாயமானது. இதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனாலும், எனக்கு ஏற்பட்டிருக்கின்ற இருதய நோய் மற்றும்; தொற்றுநோய் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

ஆகையால் தான் உங்களோடு இணைந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அவ்வாறு இருப்பினும், சக நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உங்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். உங்களது பிரச்சினைகள் தொடர்பாக அவர் எனக்கு அறிவித்ததன் அடிப்படையில், வடக்கு மாகாண ஆளுநருடனும் பேசியிருக்கின்றேன்.

அதாவது வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளின் விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு சகல நடவடிக்கைகளையும் எடுக்கும் படியும் ஆளுநரிடம் கோரியிருக்கின்றேன். அதற்கு ஆளுநரும் இணங்கியிருக்கின்றார். ஆனாலும், அவர் யாழ்ப்பாணத்தில் இல்லை.

இந்நிலையில், ஐனாதிபதி யாழுக்கு வருகை தர இருக்கின்றார்.

அவ்வாறு அவர் இங்கு வருகை தரவிருக்கின்ற நிலையில் பட்டதாரிகள் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறி, இதற்கொரு தீர்வைக் காண வேண்டுமென வலியுறுத்துவேன்.

இதேவேளை, இப்படிப் போராட்டத்தில் ஈடுபட்டுத்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டுமென்றதொரு அணுகுமுறை இப்போது வந்துவிட்டது. ஆனால், அதனை நாங்கள் விரும்பவில்லை. இருந்தும் போராடுவதற்கான நியாயங்கள் இருக்கின்றது. அதனை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். போராடும் பட்டதாரிகளின் பக்கம் நாமும் இருக்கின்றோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X