2025 மே 05, திங்கட்கிழமை

இரத்தினபுரி மக்களுக்கு ரூ.10 மில்லியன் நிவாரணம்

George   / 2017 ஜூன் 13 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்குட்பட்ட பிரதேசங்களில்,  வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, லங்கா சதொச நிறுவனம், 10 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது” என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலாளர்களின் எழுத்து மூல கோரிக்கைக்கு அமைய, இந்த நிவாரணம் வழங்கப்பட்டதாக  அவர் கூறியுள்ளார்.

இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் அண்மையில் நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் தொடர்பாக, தனது அமைச்சின் அதிகாரிகளையும் தனது அமைச்சின்  நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளையும் அழைத்து மீளாய்வு கூட்டமொன்றை  நடத்தியுள்ளார்.

இதன்போது, அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், “இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பிரதேசத்தில்,  47கிணறுகள் சுத்தரிக்கப்பட்டுள்ளன. 190 கிணறுகளை சுத்திகரிப்புச் செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

“இதுவரை 5இடங்களில் மருத்துவ முகாமகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், வெள்ளத்தின் பின்னர் எலிக் காய்ச்சலுக்கும், குழந்தை நோய்களுக்குமே பெரும்பாலும் வைத்தியம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“இன்னும், 9முகாம்களில் 112குடும்பங்களைச் சேர்ந்த 366பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் 1,796வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியாக 1,735வீடுகளும், முழுமையாக 61வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வியாபார நிறுவனங்களை புனரமைத்து வியாபார நடவடிக்கைகளை மீண்டும் இயல்புக்கு கொண்டு வருவதற்கு ரூபா 162மில்லியன் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் இயந்திரங்களுக்கு 78 மில்லியன் ரூபாய், கட்டடம் 23 மில்லியன் ரூபாய், மூலப்பொருட்களுக்கு 78 மில்லியன் ரூபாய் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் கைத்தொழில் அபிவிருத்தி சபை, தனது மதிப்பீட்டை பூர்த்தி செய்யவுள்ளது. இதன் பிறகு, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில்   தனது மதிப்பீட்டை மேற்கொள்ளும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X