2025 மே 05, திங்கட்கிழமை

இளம் தாயை தீயிட்டுக் கொளுத்திய கணவனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 15 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி, நள்ளாந்தளுவப் பகுதியில், ஏழு மாதக் கைக்குழந்தையொன்றின் தாயான தனது மனைவியை எரித்துக்கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கணவரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் நீதிவான் லக்மால் விக்ரமசூரிய, புதன்கிழமை உத்தரவிட்டார்.

மதுரங்குளி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை, புத்தளம்  நீதிமன்றத்தில், கடந்த முதலாம் திகதி ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் புதன்கிழமை (14) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முன்னர் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவருக்கான விளக்கமறியல், இம்மாதம் 28ம் திகதி வரையில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது.

இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தன் கணவரால் தீயிட்டு கொழுத்தப்பட்டு உயிரிழந்த இளம் தாய் உயிரிழப்பதற்கு முன்னர், தனது மரணம் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் அடங்கிய அலைபேசி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தனது கணவரால் தான் தீயிடப்பட்டதாக, அந்த அலைபேசி உள்ள வீடியோவில், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த இளம் தாயின் ஏழு மாதக் குழந்தை, சந்தேகநபரின் பெற்றோரிடம் தற்போது உள்ள நிலையில், அக்குழந்தையை, உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு வழங்குமாறும் உயிரிழந்த பெண் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். 

எனினும், இக்கோரிக்கை தொடர்பில், வேறொரு சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு நீதவான், இதன்போது உத்தரவிட்டார்.

மதுரங்குளி, நள்ளாந்தளுவப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய முஹம்மது தமீம் ஷாமிலா என்ற பெண், மே மாதம் 5ஆம் திகதி, அவரது கணவரினால் கட்டி வைத்து தீ மூட்டப்பட்டிருந்தார்.

எனினும், தீயில் எரிந்துகொண்டிருந்த குறித்த பெண்ணின் கூக்குரல் கேட்டு, அவ்விடத்துக்குச் சென்ற அயலவர்கள், கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த பெண்ணை மீட்டு, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பெண், புத்தளம் தள மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் 15 நாட்களாக சிகிச்சை பெற்­று­வந்த நிலையில், மே மாதம் 20ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மனை­வியை தீமூட்டி எரித்­த­தாகக் கூறப்­படும் கணவன், தலை­ம­றைவாகிய நிலையிலேயே, கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X